பாகிஸ்தான் பிரதமருடன் மோடி திடீர் சந்திப்பு

அஸ்டானா:

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க கஜகஸ்தானுக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார். அங்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை சந்தித்து நலம் விசாரித்தார். அவரது தாயின் உடல் நலம் குறித்தும் விசாரித்தார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பை சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் இணைந்து உருவாக்கின. ஆசியாவின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பில் இந்தியாவும், பாகிஸ்தானும் தற்போது இணைகின்றன.

இதனையடுத்து இன்றும் நாளையும் கஜகஸ்தானில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி கஜகஸ்தான் சென்றுள்ளார். அங்கு அவர் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சந்திப்பின் போது இருவரும் பரஸ்பர நலம் விசாரித்து கொண்டனர். நவாஸ் ஷெரீப்பின் உடல் நலம் குறித்தும், அவரது தாய் உடல் நலம் குறித்தும் மோடி விசாரித்தார்.

நவாஸ் ஷெரீப்பிற்கு நடந்த ஆப்ரேஷனுக்கு பின், இருவரும் சந்தித்துக் கொண்ட முதல் நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது. எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வரும் சூழலில், இரு நாட்டு பிரதமர்களின் இச்சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.