ரீவா, மத்தியப் பிரதேசம்

த்தியப் பிரதேச மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆசியாவின் மிகப் பெரிய சூரிய மின் சக்தி பூங்காவை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

உலகெங்கும் தற்போது மறுசுழற்சி மின் உற்பத்திக்கு அதிகம் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.  அவ்வகையில் காற்றாலை, சூரிய ஒளி ஆகியவற்றின் மூலம் மின் உற்பத்தி செய்வது அதிகரித்து வருகிறது.   இந்தியாவில் ஆண்டு முழுவதும் வெயில் அடிக்கும் என்பதால் சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி செய்வதில் அரசு ஆர்வம் காட்டி வருகிறது.

அவ்வகையில் மத்தியப்பிரதேச மாநிலம் ரீவா நகரில் 750 மெகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.   இந்த சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையம் 1500 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.   இவை 3 பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு 500 ஏக்கரில் 250 மெகாவாட் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த சூரிய மின்சக்தி பூங்காவை டில்லியில் இருந்து வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் திறந்து வைத்த பிரதமர் மோடி இதை நாட்டுக்கு அர்ப்பணிப்பதாக்கத் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் பிரதமர் மோடி. “சூரிய மின்சக்தியானது,  நிச்சயமானது, தூய்மையானது, பாதுகாப்பானது. உலகிலேயே 5 மிகப்பெரிய சூரிய மின்சக்தி உற்பத்தியாளர்களில் தற்போது இந்தியாவும் ஒன்றாகும்.  ரீவா சூரிய மின்சக்தி நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மின் உற்பத்தி மத்தியப்பிரதேச மின் பகிர்மான நிலையத்துக்கு மட்டுமல்ல, டெல்லி மெட்ரோ நிர்வாகத்துக்கும் வழங்கப்படும்.

இந்த ரீவா சூரிய மின் உற்பத்தி நிலையம் ஆசியாவிலேயே மிகப்பெரிய உற்பத்தி நிலையமாகும். டெல்லி மெட்ரோ நிர்வாகம் மாநிலத்துக்கு வெளியே உள்ள நிறுவன வாடிக்கையாளர்களில் ஒன்றாகும். மின் உற்பத்தியில் தற்சார்புடைமை என்பது ஆத்மநிர்பார் பாரத்தின் ஒரு அங்கமாகும். சூரிய மின் உற்பத்தி இந்த நோக்கத்தை அடைவதில் ஒருங்கிணைந்த பங்கை வகிக்கும்.

இந்த உலகமானது பொருளாதாரத்தில் கவனம் செலுத்தலாமா, சுற்றுச்சூழலில் கவனம் செலுத்தலாமா எனத் தடுமாறி வருகின்றது. ஆனால் சுற்றுச்சூழலும் பொருளாதாரமும் முரண்பட்டது கிடையாது. ஒன்றை ஒன்று பூர்த்தி செய்பவை என்பதை இந்தியா உலகிற்குக் காட்டியுள்ளது.

தூய்மை இந்தியா, ஏழைகளுக்கு எல்பிஜி இணைப்புக்கள், சிஎன்ஜி மற்றும் மின்சாரம் சார்ந்த போக்குவரத்து உள்ளிட்டவற்றுடன் சூரிய மின் உற்பத்தி திட்டத்தையும் அரசு வெற்றிகரமாகச் செயல்படுத்தி உள்ளது. ரீவா சூரிய மின் சக்தி திட்டமானது 21ம் நூற்றாண்டில் மின் உற்பத்தி துறையில் முக்கிய ஆதாரமாக இருக்கும்.  ஷாஜாபூர், நீமுச் மற்றும் சட்டர்பூரிலும் சூரிய மின்சக்தி திட்டங்கள் அமைக்கப்பட்டு வருகின்றது” எனத் தனது உரையில் குறிப்பிட்டார்.