டில்லி:

டில்லியில் டிரைவர் இல்லாமல் இயங்க கூடிய மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டத்தில் விபத்தில் சிக்கியது.

டில்லி மெட்ரோ ரெயில் கழகம் சார்பில் மெஜந்தா வழித்தடத்தில் ரெயில் சேவை துவங்கப்பட உள்ளது. டில்லி ஜானக்புரியில் இருந்து நொய்டாவரை இது இயக்கப்பட உள்ளது. இதை பிரதமர் நரேந்திர மோடி கிறிஸ்துமஸ் அன்று தொடங்கி வைக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக முழு வீச்சில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் இந்த ரெயில் இன்று சோதனை ஓட்டமாக இயக்கப்பட்டது. கால்கஜி மெட்ரோ ரெயில் நிலையத்தில் உட்புறம் வந்த இந்த டிரைவர் இல்லா மெட்ரோ ரெயில் பக்கவாட்டு சுவரில் மோதியது. சுவரை உடைத்துக்கொண்டு அந்தரத்தில் தொங்கியது. அதிர்ஷ்டவசமாக ரெயில் கவிழவில்லை. மாலை 4 மணியளவில் ஏற்பட்ட இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பில்லை.

ரெயிலின் பிரேக் சரியாக பரிசோதிக்கப்படவில்லை என்றும், மனித தவறு காரணமாகவே விபத்து ஏற்பட்டுள்ளது என்றும், இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.