ஆசியான் மாநாடு பிராந்திய பொருளாதார ஒப்பந்தத்தில் இணைய மறுப்பு? முக்கிய நலன்கள் இல்லை என பிரதமர் மோடி அதிருப்தி

டெல்லி: பிராந்தியங்களுக்கு இடையேயான விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் இந்தியா இணையாது என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

ஆர்சிஇபி என்பது உலக நாடுகளிடையே, தடையற்ற வர்த்தகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தத்தில் 16 நாடுகள் பங்கேற்று இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.

அதில், தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பான ஆசியான்(மொத்தம் 10 நாடுகள்) மற்றும் அதன் வர்த்தக கூட்டாளிகளான இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் கையெழுத்திட இருந்தன. அது தொடர்பான இறுதி முடிவு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் எடுக்கப்பட இருக்கிறது.

இந் நிலையில் பரபரப்பு திருப்பமாக அந்த ஒப்பந்தத்தில் இந்தியாவை பிரதமர் மோடி இணைக்க மறுத்துவிட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அந்த ஒப்பந்தத்தில் முக்கிய பிரச்னைகள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

 

முக்கிய நலன்களில் எந்த சமரசத்துக்கும் இடம் இல்லை என்று கூறி பிரதமர் மோடி அதில் இணைய போவதில்லை என்று அந்த தகவல்கள் கூறுகின்றன. இந்த ஒப்பந்தத்துக்கு பிறகு, இந்திய சந்தையில் சீன பொருள்கள் குவியக்கூடும் என்ற அச்சம் ஏற்கனவே நிலவி வருகிறது.

முன்னதாக, ஆர்சிஇபி என்ற ஒப்பந்தத்தினால் இந்தியா உள்பட அதில் இணைந்துள்ள அனைத்து நாடுகளும் உரிய, அதே சமயத்தில் சமரசத்துக்கு இடமில்லாத நியாயமான பலன்களை பெற வேண்டும், அனைத்து நாடுகளின் நலன்களும் உறுதி செய்யப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி ஏற்கனவே கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கார்ட்டூன் கேலரி