அகமதாபாத்: மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு, 150 ரூபாய் நினைவு நாயணயத்தை வெளியிட்டார் பிரதமர் நரேந்திர மோடி.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சபர்மதி ஆற்றின் கரையில் நடைபெற்ற நிகழ்வில் இந்த நினைவு 150 ரூபாய் நாணயம் மோடியால் வெளியிடப்பட்டது. நாட்டில் முதன்முறையாக 150 ரூபாய் நாணயம் வெளியிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். காந்தியின் சபர்மதி ஆஸ்ரமத்தில் உள்ள குறிப்பேட்டில், தனது கருத்தைப் பதிவுசெய்தார் மோடி.

அச்செய்தியில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “காந்தியின் 150வது ஆண்டு பிறந்தநாள் தினத்தில் நான் மிகவும் திருப்தியாக உள்ளேன். தூய்மை இந்தியா என்ற காந்தியின் கனவு நனவாகிக்கெண்டு வருகிறது. திறந்த வெளியில் மலம் கழிக்கும் வழக்கத்தை இந்தியா கைவிட்டுவிட்டது என்பதை இங்கே சொல்வதற்கு அதிர்ஷ்டம் செய்துள்ளேன்” என்றுள்ளார்.

கடந்த ஓராண்டாகவே காந்தியின் 150வது பிறந்தாள் விழா நாடெங்கும் விமர்சையாக கொண்டாடப்பட்டு, பல கைதிகளும் விடுவிக்கப்பட்டனர். தற்போது நினைவு நாணயம் வெளியிடப்பட்டுள்ளது.

சீக்கிய குரு குருகோபிந்த் சிங் நினைவாக 350 ரூபாய் நினைவு நாணயத்தையும், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவாக 100 ரூபாய் நினைவு நாணயத்தையும் ஏற்கனவே வெளியிட்டிருந்தார் மோடி.