ஹூஸ்டன்

ந்தியப் பிரதமர் மோடி ஒவ்வொரு அமெரிக்க வாழ் இந்தியரும் வருடத்துக்கு 5 இந்தியர் அல்லாத குடும்பத்தை இந்தியச் சுற்றுலா அனுப்புமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

ஐநா சபைக் கூட்டத்தில் கலந்துக் கொள்ள அமெரிக்கா சென்றுள்ள இந்தியப் பிரதமர் மோடி அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் பல நிகழ்வுகளில் கலந்துக் கொண்டுள்ளார்.   அமெரிக்க வாழ் இந்தியர்கள் அமைத்த ஹவ்டி மோடி,  காந்தி அருங்காட்சியக அடிக்கல் நாட்டு விழா, குஜராத்தி சமாஜ் தொடக்கம்,   சித்தி விநாயகர் உற்சவம் என பல நிகழ்வுகளில் கலந்துக் கொண்டுள்ளார்.

அவரைக் காண ஏராளமான  இந்தியர்கள் இந்த நிகழ்வுக்கு வந்துள்ளனர்.  அப்போது மோடி இந்தியர்களிடம், “எனக்காக நீங்கள் ஒரு உதவி செய்வீர்களா?  ஒரு சிறு வேண்டுகோள்.  நான் இதை உலகில் வாழும் அத்தனை இந்தியர்களுக்கும் சொல்லி வருகிறேன்.   ஒவ்வொரு வருடமும் உங்கள் ஊரில் வசிக்கும் 5 இந்தியர் அல்லாத குடும்பத்தை நம் நாட்டுக்குச் சுற்றுலா அனுப்ப வேண்டும் என முடிவு செய்துக் கொள்ளுங்கள்” என தனது உரையில் தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலக அதிகாரப் பூர்வ டிவிட்டர் பக்கத்தில் மோடி பேசிய வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.   ஒரு பதிவில் பிரதமர் அலுவலகம்,”காந்தி அருங்காட்சியகம் ஹூஸ்டன் நகரில் ஒரு முக்கிய இடமாக மாற உள்ளது.   இந்த முயற்சியில் எனது பங்கும் சிறிதளவு இருந்ததற்கு நான் மகிழ்கிறேன்.  காந்தியின் எண்ணங்கள் இளைஞர்கள் இடையில் விரைவில் பிரபலமாகும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.