நெட்டிசன்:
டில்லியில் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையின் நிறுவனரான ‘‘ராம்நாத் கோயங்கா ஊடகவியலாளர் விருது’’ வழங்கும் விழா கடந்த 4 ஆம் தேதி நடைபெற்றது.
இக் கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, “நான் சில ஊடகவியலாளர்களின் செயல்பாடுகளால் வருத்தமடைந்துள்ளேன்’ என்று பேசினார்.
அதற்கு பதில் கொடுக்கும் விதமாக ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ மூத்த ஊடகவியலாளர் ராஜ்கமல் ஜா. “ இந்தியன் எக்ஸ்பிரஸ்  அதிபர் கோயங்காவின் தலைமையில் நடந்த ஒருவிழாவில் அவ்விழாவிற்கு வருகை தந்த முதலமைச்சர் ஒரு குறிப்பிட்ட ஊடகவியலாளரை புகழ்ந்து தள்ளி விட்டார்,   இதனை அமைதியாக கேட்டுக் கொண்டு இருந்த கோயங்கா அன்று இரவே அந்த ஊடகவியலாளரை தானே வேலையிலிருந்து நீக்கிவிட்டார்” என்று பேசினார்.
ராஜ்கமல் ஜா பேசியதன் முழு விவரம்:
“எங்களது அழைப்பை ஏற்று எங்களுக் காக சிறப்பாக உரையாற்றிய மோடி அவர்களுக்கு நன்றி. ஊடகவியலாளர்களில் நல்லவர்களின் செயலுக்காகப் பாராட்டு தெரிவிக்க இந்த மாலை நேரத்தில் நாம் அனைவரும் இங்கே கூடியிருக்கிறோம் என்று நினைக்கிறேன்.
ஊடக உலகம் பல படிகள் கொண்ட ஒரு அமைப்பு என்பது அனைவருக்கும் தெரியும். இந்தப் படியமைப்பில் செய்தி திரட்டுபவர்கள், ஆசிரியர்கள், மற்றும் பதிப்பாளர்கள் என பல்வேறு படியமைப்புகள் உள்ளன. இதில் ஒருவர் அரசுக்கு ஆதரவாக இருந்தாலும் மற்ற படிநிலையில் உள்ளவர்கள் மக்களுக்கு ஏற்றவாறு மாறவேண்டும்.

ராஜ்கமல் ஜா - மோடி
ராஜ்கமல் ஜா – மோடி

ஆனால் இன்றைய காலகட்டத்தில் இறுதி முடிவுகளை எடுக்கவேண்டிய வர்கள் அரசுக்கு ஆதரவான நிலையை எடுப்பவர்களாக உள்ளனர் அவர்களின் எண்ணங்களே செய்தி தொலைக்காட்சியில் செய்திகளாகவும், அச்சுக்களாகவும் வருகின்றன. இவை அனைத்தும் சக்தி வாய்ந்த ஒரு அதிகார அமைப்பின் பின்புலத்தில் வேலை செய்கின்றன. இவர்களை அடையாளம் காண (மோடி) அரசு தவறி விடுகிறது.
இன்றைய ஊடகவியலாளர்கள் சுய நலத்துடன் வாழும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அவர்களுக்குச் செய்தியின் உண்மை மற்றும் அரசின் நியாயமற்ற செயல்பாடுகள் பற்றி கவலையில்லை. அவர்கள் அலுவலகத்திற்குள் நுழையும் போதே செய்தியை மக்களிடம் கொண்டு செல்வதற்கு ஒரு அளவுகோலை நிர்ணயித்து விடுகிறார்கள். இந்த அளவு கோலுக்குப் பின்னால் அரசின் அத்தனை மக்கள் விரோதச் செயல்களும் மறைந்து போகின்றன.
நீங்கள் (மோடி) பேசும்போது ‘நான் சில ஊடகவியலாளர்களின் செயல்பாடுகளால் வருத்தமடைந்துள்ளேன்’ என்று கூறினீர்கள். உங்களுக்கு என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால் நேரமிருந்தால் விக்கிபீடியா வலைதளத்திற்குச் சென்று ராம்நாத் கோயங்காவின் வாழ்க்கை வரலாறைப் படித்துப் பார்க்கவும், அவர் பத்திரிகை நடத்தியபோது அவருக்குக் கீழ் பணிபுரியும் ஊடகவியலாளர்கள் மீது மத்திய மாநில அரசுகளிடமிருந்து எத்தனையோ புகார்கள் வந்துள்ளன.
புகாரில் கூறப்பட்ட ஊடகவியலாளர்களை அழைத்து அவர் பாராட்டு தெரிவித்து கவுரவப்படுத்துவார். ஒருமுறை கோயங்காவின் தலைமையில் நடந்த ஒருவிழாவில் அவ்விழாவிற்கு வருகை தந்த முதலமைச்சர் ஒரு குறிப்பிட்ட ஊடகவியலாளரை புகழ்ந்து தள்ளி விட்டார்,
இதனை அமைதியாக கேட்டுக் கொண்டு இருந்த கோயங்கா அன்று இரவே அந்த ஊடகவியலாளரை தானே வேலையிலிருந்து நீக்கிவிட்டார்.
ஊடகவியலாளர்களுக்கு வயது முக்கியமில்லை. எனக்கு ஐம்பது வயதாகி விட்டது. இன்றைய தலைமுறை ஊடகத்துறை நண்பர்கள் இணைய தளங்களில் அவர்களின் செய்திகளுக்கு கிடைக்கும் ‘லைக்ஸ்’ மற்றும் டுவிட்டர்களில் மிகவும் புளகாங்கிதம் அடைகிறார்கள். அதுவே அவர்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகக் கருதுகிறார்கள். இவர்களுக்கு அரசு விருதுகள் கிடைத்தால் இவர்களின் பணியில் பாதிப்புகள் ஏற்படும் என்பது உண்மை.
இத்துறையில் அரசு சார்பில் விருது பெறுகிறோம் என்றால் திரைப்படத்தில் புகைப்பிடிக்கும் காட்சி வரும்போது எப்படி கீழே எச்சரிக்கை வாசகங்கள் வருகிறதோ அப்படி உங்கள் மனதில் ஓர் எச்சரிக்கை வாசகம் ஓடவேண்டும்.
அரசின் செயல்பாட்டை ஊடகவியலாளர்கள் விமர்சித்தே ஆகவேண்டும். இன்றைய ஊடகவியலாளர்களின் செயல்பாடுகள் அரசுக்கு ஆதரவாக இருக்கின்றன என்று நான் திறந்த மனதுடன் கூறுகிறேன். இவர்களின் பின்னணியில் அரசு இருக்கிறது என்று கூறவில்லை. ஆனால் இவர்களின் செயல்பாடுகளுக்கு அரசு மயங்கிவிடக்கூடாது என்று நான் இங்கே எடுத்துச் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
ராம்நாத் கோயங்கா விருதிற்கு 562 விண்ணப்பங்கள் வந்துள்ளன. அநேகமாக இந்த முறை மிகவும் அதிக விண்ணப்பங்கள் வந்துள்ளன. இந்த விண்ணப்பங்கள் நல்ல ஊடகவியலாளர்கள் இன்றளவும் உள்ளனர் என்ற நம்பிக்கையை நமக்கு ஏற்படுத்தியுள்ளது. இவர்களைக் கண்டு அரசாங்கம் அஞ்சுகிறது என்றால் இவர்களின் ஊடகப்பணி மிகவும் சிறப்பாக விளங்குகிறது என்று பொருள்.
உண்மையை உரக்கச் சொல்லும் ஊடகங்களுக்கு என்றுமே மரணமில்லை. அவை அமைதியாக தன்னுடைய பணியைச் செய்துகொண்டு இருக்கும். ஆனால், பொய்களையும், அரசின் நியாயமற்ற செயல் களுக்கு கூஜாவும் தூக்கும் ஊடகங்களில் இரைச்சல் அதிகமிருக்கும். ஆனால், அந்த அரசின் காலம் வரையிலும்தான் அவை களின் வாழ்நாள் மிளிரும் என்பதை இங்கே கூறிக்கொண்டு எனது உரையை முடிக்கிறேன் என்று ராஜ்கமல் ஜா பேசினார்.