ரியாத்தில் இந்தியத் தொழிலாளர்களுடன் மோடி: செல்ஃபி எடுத்த சவுதிப் பெண்கள்

 

 கடந்த செவ்வாய்க்கிழமை டெல்லியில் இருந்து  மூன்று நாடுகள் சுற்றுப்பயணத்தை துவங்கினார் நரேந்திர மோடி. முதலில் பெல்ஜியம், அடுத்து வாஷிங்டன் என பயணத்தை முடித்து  மூன்றாவதாக  நேற்று சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தை வந்தடைந்தார். அவரை  விமான நிலையத்தில் ரியாத் ஆளுநர் பைசல் பின் பந்தர் அல் சாத் வரவேற்றார்.

 

இந்தியத் தொழிலாளர்கள், டி.சி.எஸ் பெண் ஊழியர்கள் மற்றும்  சேம்பர் ஆப் காமெர்ஸ் ஆகிய மூன்று இடங்களில் அவர் உரையாற்றினார்.

modi in riyadh

 

முதலில், தலைநகர் ரியாதில்  மெட்ரோ ரயில் நிலைய பணிகளை  செய்துவரும் இந்தியாவைச் சேர்ந்த எல் அண்ட் டி நிறுவனத்தில்  பணியாற்றிவரும்  1000 இந்தியத் தொழிலாளர்களின் வசிப்பிடத்துக்கு சென்ற மோடி, உலகின் பல்வேரு இடங்களில் உள்ள உள்கட்டமைப்புக்கு இந்திய தொழிலாளர்கள் ஆற்றியுள்ள பங்களிப்பை பெரிதும் பாராட்டினார்.  எதிர்காலத்தில், ரியாத் மெட்ரோ கூட இதேபோல் இந்தியத் தொழிலாளர்களின்  கட்டுமான பங்களிப்பினை  நினைவு கொள்ளும் என்று அவர் கூறினார். நான் உங்கள் குடும்பத்தின் ஒரு பகுதியாக உணர்கிறேன்.  உங்கள் கடின உழைப்பு தான் என்னை இங்கேக் கொண்டு வந்து சேர்த்தது என்றார்.  வெளிநாட்டில் வேலை செய்ய விரும்பிய மக்களுக்கு மத்திய அரசு முயற்சியில் துவக்கப் பட்டுள்ள இணைய-இடப்பெயர்வு (e-migrate) திட்டம் பயனுள்ளதாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.  இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உருவாக்கியுள்ள ‘மதத்’  என்னும் இணையதளத்தின் மூலம் வெளிநாடுகளில் வாழும் இந்திய தொழிலாளர்கள் தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என்றும் கூறினார்.

modi in riyadh 1 madad

 

அதனை தொடர்ந்து ரியாத் நகரில் உள்ள அனைத்து பெண்கள் மையம் ஒன்றில் டாடா கன்சல்டன்சி ஊழியர்களின் நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.  அதில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பெண்கள் பலரும் மோடியுடன் ஆர்வமாக செல்பி எடுத்து கொண்டனர். பெண்களின் கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதில் அளித்தார்.  “பெண்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கு முக்கிய பங்கு வகிப்பவர்கள். சவுதி அரபேியாவில் பணியாற்றும் பெண்கள் நிலை எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இவர்கள் சவுதி அரேபியாவின் முன்னேற்றத்திற்கு உழைக்கிறார்கள். உலக பொருளாதார முன்னேற்றத்திற்கு இங்கு உள்ள பெண்கள் உழைப்பது கண்டு நான் பெருமை அடைகிறேன், இந்தியாவுக்கு வாருங்கள் என நான் உங்களை வரவேற்கிறேன். தீவிரவாதத்தை ஒழிக்க  ஒன்று சேர்ந்து போராட வேண்டும். வர்த்தக உறவை மேம்படுத்துவதே இந்தியாவின் நோக்கம் எனக்  கூறினார்.

modi in riyadh 1

மூன்றாவதாக, சேம்பர் ஆப் காமர்ஸ் நடத்திய நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகையில்; இந்தியாவும், ரியாத்தும் வரலாற்று ரீதியில் போற்றத்தக்க வகையில் உறவு உள்ளது. இந்தியாவில் இளைஞர் பலம் , ஜனநாயகம் பெரும் பலமாக இருக்கிறது. அடிப்படை கட்டமைப்பு மற்றும் தொழில் நுட்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் நல்ல வளர்ச்சியை காண முடியும். வரி விதிப்பு முறையில் மாற்றம் கொண்டு வருவோம். ஜிஎஸ்டி மசோதா விரைவில் நிறைவேறும்.
புதுப்பிக்க தக்க எரி சக்தி நிலை வளர வேண்டும். இதில் நாங்கள் பெரும் கவனம் செலுத்தி வருகிறோம்” என்றார்.