ரஃபேல் விமான பேரத்தை மோடி அடுத்த போஃபர்ஸ் ஆக்குவாரா?

டில்லி

ஃபேல் விமான பேரத்தை மற்றொரு போபர்ஸ் ஆக்கக் கூடாது என பிரதமர் மோடிக்கு தி ப்ரிண்ட் செய்தி ஊடகம் கூறி உள்ளது.

நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மான வாக்கெடுப்பின் போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ரஃபேல் விமான பேரத்தில் ஊழல் நடந்துள்ளதாக பகிரங்க குற்றச்சாட்டை பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.  இதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.  இந்நிலையில் செய்தி ஊடகமான தி ப்ரிண்ட் ஒரு செய்திக் கட்டுரையை வெளியிட்டுள்ளது.

அந்த கட்டுரையில்,

“சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய ஜனதா கட்சியின் அரசு ஆங்கிலோ பிரெஞ்சு நிறுவனமான ஜாகுவார் இடம் இருந்து போர் விமானங்கள் வாங்கிய பின்னரே ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.   இந்த ஊழல் குற்றச்சாட்டுகளில் யாரும் தண்டிக்கப்படவில்லை மற்றும் ஒரு டாலராவது ஊழல் நடந்ததாக நிரூபிக்கப்படவில்லை.

கடந்த 1977 ஆம் ஆண்டு வரை இந்திய விமானப்படையின் விமானங்கள் அப்போதய சோவியத் யூனியனில் இருந்து வாங்கப்பட்டு வந்தன.   அதன்பிறகு வந்த மொரார்ஜி அரசு சோவியத் யூனியனை விடுத்து வேறு மேற்கத்திய நாடுகளில் விமானம் வாங்க தொடங்கியது.   மீண்டும் இந்திரா காந்தி 1980ல் ஆட்சிக்கு வந்ததும் சோவியத் யூனியனுடன் வர்த்தக உறவை புதுப்பித்துக் கொண்டார்.

ஆனால் ராஜிவ் காந்தி பிரதமர் ஆன பிறகு  அனைத்தையும் நவீன மயமாக்க ஆரம்பித்தார்.   அந்த வரிசையில் சுவீடனின் போஃபர்ஸ் பீரங்கிகள் மற்றும் ஜெர்மனின் டைப் 209 நீர் மூழ்கிக் கப்பல்கள் ஆகியவை வாங்கப்பட்டன.   போஃபர்ஸ் பீரங்கி வாங்கியதில் ஊழல் உள்ளதாக மோடி அரசு இன்று வரை கூறி வருகிறது.  அதில் சம்மந்தப்பட்ட ராஜிவ் காந்தி மற்றும் குவாத்ரோச்சி உட்பட பலர் மரணம் அடைந்தும் அதையே கூறி வருகிறது.

இந்த ராணுவ தளவாட ஊழல் புகார்கள் வாஜ்பாய் ஆட்சியிலும் தொடர்ந்தன.   ராணுவ வீரர்களுக்கான சவப்பெட்டி மற்றும் தெகல்கா ஊழல் புகார்கள் அப்போது பரபரப்பாகி பின் அடங்கி விட்டது.    இந்த இரு ஆட்சியில் நடந்த ஊழல்கள் குறித்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.  மேலும் யாரும் தண்டிக்கப்படவில்லை.  இருந்தும் தொடர்ந்து புகார்கள் கூறப்பட்டு வருகின்றன.

இந்த புகார்கள் அடுத்தடுத்து வந்த ஆட்சிகளின் போதும் எழுந்தன.  ஆனால் அந்த புகார்களும் நிரூபிக்கப்படாமல் உள்ளன.  தற்போது ரஃபேல் விமான பேர ஊழல் பற்றிய புகார்கள் எழுந்துள்ளன.  இது குறித்து விசாரணைக்கு பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும்.

இதில் ஊழல் இல்லை எனில் விசாரணை செய்வதில் மத்திய அரசு தயக்கம் காட்டக் கூடாது.  இவ்வாறு விசாரிக்கவில்லை எனில் இதுவும் போஃபர்ஸ் ஊழல் புகார் போல தொடர்ந்துக் கொண்டே இருக்குமே தவிர ஒரு முடிவுக்கு வராது”

என கூறப்பட்டுள்ளது.