சென்னை:
காவிரி பிரச்சினையில் பிரதமர் நரேந்திரமோடியும், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் தலையிட வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி வலியுறுத்தி உள்ளார்.
download
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
“காவிரி நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்சினையில் கர்நாடக அரசு, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தைச் சிறிதும் எண்ணிப் பார்க்காமல் தொடர்ந்து மீறிவருகிறது;  அதன் காரணமாகப் பெரிதும் பாதிப்புக்காளாகும் தமிழக விவசாயிகளின் துன்ப நிலையைக் கண்டும் காணாமல் அலட்சியப் படுத்திவருகிறது. தற்போது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை நிறைவேற்றாமல் , அனைத்துக்கட்சிக் கூட்டம், அமைச்சரவைக் கூட்டம், சட்டமன்றச் சிறப்புக் கூட்டம் ஆகியவற்றை நடத்தித் தீர்மானம் நிறைவேற்றி அரசியல் சட்ட நெருக்கடியையும் , மோதல் போக்கையும் கர்நாடக அரசு உருவாக்கி வருகிறது.
கூட்டாட்சி முறைக்குக் குந்தகம் விளைவிக்கும் இப்படிப்பட்ட அணுகுமுறையைத் தவிர்த்திட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு அறிவுரை கூற வேண்டியவர்கள், நெருக்கடியை ஏற்படுத்திடும் போக்குக்கு ஆதரவளிப்பது வேதனை தருகிறது. மத்தியில் ஆளும் பா.ஜ.க வைச் சேர்ந்த அனந்த குமார், சதானந்த கவுடா, உமாபாரதி ஆகிய அமைச்சர்கள் தமிழ்நாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருப்பதும், முன்னாள் பிரதமர் தேவகவுடா உண்ணாவிரதம் மேற்கொள்ளும் நிலைக்குச் சென்றிருப்பதும் கெட்ட வாய்ப்பாகும். எனவே கொதி நிலையை அடைந்து விட்ட இந்தப் பிரச்சினையில் , நிர்வாக ரீதியாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கும் இருக்கிறது.
ஆகவே, பிரதமர் மோடி அவர்களும், கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி என்ற நிலையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் அரசியல் ரீதியான கடமை இருப்பதால் திருமதி சோனியாகாந்தி அம்மையாரும் நேரடியாகத் தலைiயிட்டு, பிரச்சினை திசை திரும்பிப் போய்விடாமல், தீர்வுகாணும் நோக்கில், விளைவுகளை விளக்கி, கர்நாடக அரசை நல்வழிப்படுத்திட உடனடியாக முன்வர வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்” – இவ்வாறு கருணாநிதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.