ஆந்திராவும் இந்தியாவில் ஒரு பகுதியே : மோடியை தாக்கிய சந்திரபாபு நாயுடு

டில்லி

ந்திர மாநிலமும் இந்தியாவில் ஒரு பகுதி என நினைத்து பிரதமர் பேச வேண்டும் என சந்திரபாபு நாயுடு கூறி உள்ளார்.

ஆந்திர பிரதேச மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி விடுத்த கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றாததால் கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் விலகியது.   அத்துடன் மத்திய பாஜக அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தது.    அந்த தீர்மானத்தின் மீது கடுமையான விவாதத்துக்குப் பின் வாக்கெடுப்பில் பாஜக அரசு வெற்றிபெற்றது.

பிரதமர் மோடி இந்த விவாதத்தின் போது ”ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் வலையில் விழுந்து ஏமாந்து விட்டது.   அவர்கள் பேச்சைக் கேட்டு மத்திய அரசை மிரட்டி வருகிறது” எனக் கூறியதோடும் ஆந்திர மாநில அரசியல் கட்சிகளை கடுமையாக தாக்கி உரையாற்றினார்.   தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு நேற்று டில்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது சந்திரபாபு நாயுடு, “ஆந்திர பிரதேச மாநிலம் மீண்டும் ஏமாற்றப்பட்டு விட்டது.   இதை ஒட்டி வரும் சனிக்கிழமை போராட்டம் ஒன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.     பிரதமர் ஆந்திராவையும் இந்தியாவில் ஒரு பகுதி எனக் கருதி பேச வேண்டும்.   ஆனால் அவ்வாறு நினைக்காமல் மலிவாகவும் பொறுப்பற்றும் பேசி உள்ளார்.

அவர் ஆந்திர மக்களுக்கு அநீதி இழைத்து விட்டு நாங்கள் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் வலையில் விழுந்ததாக போலி குற்றம் சாட்டுகிறார்.   உண்மையில் அவர் தான் அந்தக் கட்சியுடன் கூட்டாக செயல்படுகிறார்.    தெலுங்கு தேசம் கட்சி மாநிலத்துக்காக நாடாளுமன்றத்தில் போராடும் போது ஜகன்மோகன் ரெட்டி ஊழல் வழக்குக்காக நீதிமன்றத்தில் இருக்கிறார்.  பவன் கல்யாண் டிவிட்டரில் இருக்கிறார்.    இருவரும் பாஜக வை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

ஒரு மாநிலக் கட்சி கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு பல எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.   இது அந்த தீர்மானத்துக்கு வெற்றி என கூற வேண்டும்.    பிரதமருக்கு நல்ல பேச்சுத் திறன் உள்ளது.   அவரது ஒன்றரை மணி நேர உரை ஒரு பாலிவுட் ஹிட் திரப்படம் போல உள்ளது.  அருமையான நாடகம்.   அருமையான நடிப்பு” எனக் கூறி உள்ளார்.