பிரியங்காவின் அரசியல் வரவால் குழம்பிப் போன மோடியின் டிவி சகாக்கள்

டில்லி

பிரியங்கா காந்தியின் அரசியல் வரவால் மோடிக்கும் பாஜகவுக்கும் ஏற்பட்டுள்ள நிலை குறித்து தி குவிண்ட் ஊடகம் செய்தி கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.

பிரியங்கா காந்தி தற்போது உத்திரப் பிரதேச கிழக்கு பகுதிக்கு பொதுச் செயலாளராக பொறுப்பு ஏற்றுள்ளார். அதை ஒட்டி அவருக்கு வாழ்த்துச் செய்திகள் குவிந்து வருகின்றன. அப்பகுதியில் மோடியின் வாரணாசி தொகுதி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பிரியங்காவின் அரசியல் வரவு குறித்து பிரபல செய்தி ஊடகமான தி குவிண்ட் ஒரு செய்தி கட்டுரை வெளியிட்டுள்ளது.

அந்த செய்திக் கட்டுரையில், “மோடியின் அரசியல் குறித்து இது வரை யாரும் சில காலமாக அதிகம் பேசுவதில்லை. அவரை வலுவானவர், செயலாளர் என கூறி வந்தனர். அத்துடன் அவருக்கு எதிராக உள்ளவர்களை வலுவற்றவர்கள், செயலற்றவர்கள் எனவும் விமர்சித்தனர். அத்துடன் அவரை மண்ணின் மைந்தன், பணியில் பற்றுள்ளவர் எனவும் அவருக்கு எதிரானவர்களை அரச வாரிசு, வெளிநாட்டு மைந்தர் எனவும் அவரே விமர்சித்து வந்தார்.

ஆனால் பிடிவாதமானவர் என அவரை யாரும் இதுவரை வர்ணிக்கவில்லை. குறிப்பாக பாஜகவுக்கு ஆதரவான தொலைக்காட்சி ஊடகங்களில் அவரைப் பற்றி யாராவது எதிர் கருத்து தெரிவித்தால் உடனே அந்த நிகழ்ச்சியின் பொறுப்பாளர் அவரை நோக்கி கூச்சலிட்டு அல்லது கத்தி எதிர் கருத்து சொல்வோரை அடக்குவது மட்டுமே நிகழ்ந்து வந்தது.

இரண்டு மாபெரும் தொலைக்காட்சி சேனல்கள் சில தினங்களுக்கு முன்பு அமேதியில் ஸ்மிரிதி இரானி போட்டியிட இருப்பதால் பயந்து போன ராகுல் மூன்று தொகுதிகளில் போட்டியிடுவார் என கூறின. ஆனால் சட்டப்படி இரண்டு தொகுதிகளுக்கு மேல் ஒரு நபர் போட்டி இடமுடியாது என்பதை அந்த சேனல்கள் மறந்து விட்டன. அது மட்டுமின்றி அதற்குப் பிறகும் இது குறித்து மக்களிடம் மன்னிப்பொ வருத்தமோ தெரிவிக்கவில்லை.

தற்போது மீண்டும் காங்கிரஸ் கட்சி கடந்த 2009 ஆம் ஆண்டு இருந்த அளவுக்கு பலம் பொருந்தியதாக உள்ளது. அப்போதைய தேர்தலில் உத்திரப் பிரதேசத்தில் வென்ற தொகுதிகளில் பெரும்பாலான தொகுதிகள் கிழக்கு உத்திரப் பிரதேசத்தை சேர்ந்தவைகள் ஆகும். அதாவது அங்கு 15 தொகுதிகளில் வென்றது. தற்போதைய கருத்துக் கணிப்புகளும் நடந்த முடிந்த சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு 12% வரை வாக்காளக்ரள் ஆதரவு அதிகரித்துள்ளதை காட்டுகிறது.

மக்களவை சபாநாயகரான சுமித்ரா மகாஜன் தற்போது பாஜகவின் ஊதுகுழலாக உள்ளார். சீசரின் மனைவியைப் போல் அவரும் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது அரசியல் சாராமல் இருக்க வேண்டும். ஆனால் அவர், “ராகுல் தாம் தனியாக அரசியலை செய்ய முடியாமல் அவர் சகோதரியின் உதவியை நாடி உள்ளார். இதன் மூலம் அவரால் பொறுப்புக்களை சுமக்க முடியவில்லை எபதை நான் தெரிந்துக் கொண்டேன்” எனக் கூறி உள்ளார்.

அவருக்கு அடுத்த படியாக யோகி ஆதித்யநாத் “ராகுல் + பிரியங்கா = பூஜ்யம் + பூஜ்யம் என கூறி உள்ளார். அவருக்கு வேத கால கணிதத்தின்படி பூஜ்யம் என்பது உலகுக்கு இந்தியா அளித்த ஒரு எண் என்பது தெரியவில்லை. அத்துடன் + குறி என்பது எதையாவது அதிகம் ஆக்குவதற்கு பயன்படும் என்பதையும் அவர் மறந்து விட்டார். ஆனால் பிரியங்கா காந்தி பாஜகவின் பலத்தை வகுக்க வந்துள்ளார். எந்த ஒரு எண்ணையும் பூஜ்யத்தால் வகுக்கும் போது அது மிக பெரிய எண் ஆகும் (இன்ஃபினினிடி) ஆகவே பிரியங்காவுக்கு அளவிட முடியாத ஒரு பலம் உள்ளது என யோகி ஒப்புக் கொண்டுள்ளார்.

இவ்வாறு பிரியங்காவின் அரசியல் வரவால் குழம்பிப்போனது பாஜக தலைவர்கள் மட்டுமல்லாமல் மோடியின் ஆதரவு தொலைக்கட்சி சேனல்களும் என்பது அவற்றின் செய்தி தலைப்புகளில் தெரிய வந்துள்ளது.

ஒரு தொலைக்காட்சியில் “பிரேக்கிங் நியூஸ் : பிரியங்கா அரசியல் நுழைவு : ராகுல் காந்தி தேர்தலுக்கு முன்பே பயந்து விட்டாரா” என வருகிறது. மற்றொரு சேனலில், “தேர்தலுக்கு பல மாதங்களுக்கு முன்பே காங்கிரஸுக்கு பயம் : வதேரா (பிரியங்கா) ஒரு சக்தி வாய்ந்த கோணத்தில் பயணிப்பாரா” என தலைப்புச் செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன் மோடிக்கு ஆதரவு அளிக்கும் அத்தனை ஊடகங்களும் ”ராகுல் அரசியலில் தோற்று விட்டார். அதனால் அவர் பிரியங்காவை கிழக்கு உத்திரப் பிரதேசத்துக்குள் அடைத்து வைக்க முயல்கிறார். ஆனால் காங்கிரஸ் கட்சியில் பிரியங்காவுக்கு அவர் சகோதரரை விட அதிகம் ஆதரவு உள்ளது. அவர் ஏற்கனவே அரசியலுக்கு வர ராஹுல் அழைத்த போது அதை மறுத்துள்ளார், தற்போது அவர் அரசியலில் நுழைய அவரை யாரோ வற்புறுத்தி உள்ளனர். காங்கிரஸ் கட்சி தனது கட்சியில் யாரும் இல்லாமல் சமாளிக்க முடியாது என்பதை தெரிந்துக் கொண்டுள்ளது.”
எனவும்
”பிரியங்காவின் கணவரின் ஊழலுக்காக பிரியங்கா பலி ஆக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் ஏன் பிரியங்காவை தலைமைக்கு கொண்டு வர 20 வருடங்கள் காத்திருந்தது? வரும் 2019 மக்களவை தேர்தலில் ஏனென்றால் ராகுல் மட்டுமே காங்கிரஸுக்கு வெற்றியை கொண்டு வர முடியாது என்பதை தற்போது தான்அக்கட்சி தெரிந்துக் கொண்டுள்ளதா?”
எனவும்
கருத்துக்களை சொல்வது பாஜக தலைவர்கள் அல்ல. மோடிக்கு ஆதரவான நட்சத்திர பத்திரிகையாளர்கள் தான் இத்தகை கரூத்துக்களை சொல்லி உள்ளார்.

சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக விடம் இருந்து 3 மாநிலங்களை ராகுல் காந்தி பறித்து காங்கிரசுக்கு அளித்துள்ளார். ஆனாலும் அவரை இந்த ஊடகங்கள் தோல்வியாளர் என அழைத்து வருகிறது. சமீபத்திய கருத்துக் கணிப்புகளில் ராகுல் காந்திக்கு அதிக செல்வாக்கு கூடியதாக கருத்துக்கள் வருகின்ரன. ஆனால் அவருக்கு தேர்தல் பயம் என ஊடகங்கள் சொல்லுகின்றன. பிரியங்காவின் கணவர் மீது எவ்வித வழக்கும் கிடையாது. ஆனால் அவரை ஊடகங்கள் ஊழல் பேர்வழி என குறிப்பிடுகின்றன.

எனவே திரு மோடி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறோம். தயவு செய்து உங்கள் ஆதரவு பத்திரிகையாளர்களை நாட்டு நடப்பை அறிந்துக் கொண்டு புத்தியை அதில் செலுத்தி கருத்து தெரிவிக்க அறிவுறுத்துங்கள். கடந்த முறை தொலைக்காட்சிகள் வாஜ்பாய் அரசை புகழ்ந்த நிலையில் அவர் தோல்வி அடைந்தார். ஆகவே இம்முறையும் உங்கள் ஆதரவு தொலைக்காட்சி ஊடகங்கள் ராகுல் காந்திக்கு வெற்றியை தேடி தரலாம் என தோன்றுகிறது” என குறிப்பிட்டுள்ளது.