என்ன செய்யக்கூடாது என்பதை மோடி கற்பித்துள்ளார் : ராகுல் காந்தி

டில்லி

மீபத்திய சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் மூலம் தாம் என்ன செய்யக் கூடாது என்பதை பிரதமர் மோடி கற்றுக் கொடுத்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் முன்னணி பெற்றுள்ளது. பாஜக தான் ஆட்சி செய்துள்ள மாநிலங்களில் பெரும்பான்மையை இழந்துள்ளது. தெலுங்கானா மாநிலத்தை தவிர மற்ற மாநிலங்களில் இந்த தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு ஏறுமுகத்தை அளித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பிரசாரமே இந்த வெற்றிக்கு காரணம் என பலர் புகழாரம் சூட்டி வருகின்றனர்.

ராகுல் காந்தி நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திபில், ”பிரதமர் மோடி தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளில் எதையும்நிறைவேற்றவில்லை. வேலைவாய்ப்பு, ஊழல் எதிர்ப்பு ஆகிய பல வாக்குறுதிகளை அவர் அளித்தார். போதிய அளவு வேலைவாய்ப்பை அவர் உருவாக்கவில்லை. மக்கள் பிரதமரே ஊழல் செய்துள்ளதாக கருதுகின்றனர். இவை எல்லாம் பாஜகவின் தோல்விக்கு காரணம்.

கடந்த 2014 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் காங்கிரஸ் படு தோல்வி அடைந்தது. அது எனது முன்னேற்றத்துக்கு உதவி செய்தது என என் தாயிடம் நான் கூறி உள்ளேன். அந்த தேர்தல் தோல்வி மூலம் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நான் கற்றுக் கொண்டேன். மனிதாபிமான முறையில் மக்களை அணுக எனக்கு கற்பித்தது அந்த தோல்வி தான்.

அதைப்போலவே நான் என்ன செய்யக் கூடாது. பிரதமர் மோடி மீண்டும் வெற்றி பெற மிகவும் வாய்ப்பு இருந்தது. ஆனால் அதை அவர் இழந்துள்ளார். அது முழுக்க முழுக்க அவருடைய தவறான வாக்குறுதிகள், மற்றவரை தாக்கி தகாத வார்த்தைகளை பயன்படுத்துவது ஆகியவைகள் ஆகும். அதை நான் ஒருபோதும் செய்ய மாட்டேன்.

இந்த வெற்றிக்கு முழுக் காரணம் கட்சியின் தொண்டர்களும் சிங்கம் போன்ற நாட்டின் இளைய சமுதாயத்தினரும் தான். அவர்களுக்கு எனது நன்றிகள்” என தெரிவித்துள்ளார்.