இந்த மாத இறுதியில் 25 லட்சம் காவல்காரர்களை சந்திக்கும் மோடி.

டில்லி

மோடியின் நானும் காவல்காரன் என்னும் இணைய இயக்கத்தில் கலந்துக் கொண்டுள்ளவர்களை வரும் 31 ஆம் தேதி இணையம் மூலம் மோடி சந்திக்கிறார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை காவல்காரன் திருடன் ஆனார் என விமர்சித்து வருகிறார். அதை ஒட்டி இணையத்தில் பிரதமர் மோடி நானும் காவல்காரன் என்னும் ஹேஷ்டாகை தொடங்கினார். இதற்கு ஆதரவு அளிக்கும் படி அனைவரையும் கேட்டுக் கொண்டார்.

அதை ஒட்டி பாஜக தொண்டர்கள், ஆதரவாளர்கள் மற்றும் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் பெயருக்கு முன்னால் காவல்காரர் (சௌக்கிதார்) என பெயரை மாற்றினார்கள். இதற்கு இணையத்தில் கடும் விமர்சனம் எழுந்தது. மோடி வரும் 31ஆம் தேதி இந்த காவல்காரர்களை சந்திக்க உள்ளார்.

இதுகுறித்து பாஜக ஊடக தலைவர் அனில் பலூனி “இன்று மாலை காவல்காரர்களுடன் மோடி ஹோலி பண்டிகையை முன்னிட்டு தனது எண்ணங்களை பகிர்ந்துக் கொள்கிறார். அத்துடன் பாஜகவின் காவல்காரர்கள் மோடியின் எண்ணத்தை நிறைவேற்ற விடுமுறை இன்றி நாள் முழுவதும் உழைக்கின்றனர்.  அவர்களை வரும் 31 ஆம் தேதி அன்று மோடி நாட்டின் 500 இடங்களில் இணையம் மூலம் சந்திக்கிறார்” என தெரிவித்துள்ளார்.