மக்களை ‘வரி’க்குதிரையாக மாற்றிவிட்டார் மோடி! டி.ஆர். குற்றச்சாட்டு

சென்னை,

ட்சிய திமுக சார்பில் இன்று சென்னையில் ஜிஎஸ்டி வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் கலந்துகொண்டு பேசினார். சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற போராட்டத்தில் டி. ராஜேந்தர் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது, வருமானவரி முதல் ஜிஎஸ்டி வரி என அனைத்து வரிகளையும் போட்டு இந்தியர்களை ஒரு வரிக்குதிரையாக மாற்றிவிட்டார் மோடி என்றும்,

மன்னர் ஆட்சியில் கூட இல்லாத வரி மக்களாட்சியில் விதிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

வரி, வரி என மக்களுக்கு வலியைத்தான் கொடுப்பீர்களா என்று கேள்வி எழுப்பிய  ராஜேந்தர்,  மோடி ஆட்சி இந்தியாவில் வந்தால் ஆனந்தபவனாக இருக்கும் என நினைத்தால் கையேந்தி பவனாக மாறிவிட்டது என்றும், சம்பாதிக்கும் பணம் அனைத்தும் வரிக்கே போய்விடுகிறது என்று கூறினார்.

மேலும் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த டி.ராஜேந்தர், பெரியார் பல்கலைகழகத்தில் இதழியல் படித்துவரும் சேலத்தை சேர்ந்த மாணவி வளர்மதியை,  நக்சலைட்டுகளுக்கு ஆட்கள் சேர்ப்பதாக குற்றம் சாட்டி கைது செய்து, தற்போது  திடீரென குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளததை வன்மையாக கண்டிப்பதாகவும்,

கதிராமங்கலம் பிரச்சனையால் ரத்தம் கொதிப்பதாகவும், மேலும், கடலில் எண்ணெய் மிதந்தது போல கதிராமங்கலத்தில் குழாய் வெடிப்பின் மூலம் எண்ணெய் காடாக காட்சி அளிக்கப் போவதாகவும் அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

கமல்ஹாசன் டுவிட்டர் பதிவு குறித்து பதிலளித்த அவர், அரசியலில் பலர் ஏவுவார்கள் அம்பு, எதிரிகள் சீவி விடுவார்கள் கொம்பு, வசமாக வந்து இழுப்பார்கள் வம்பு, இதையெல்லாம் எதிர்க்க வேண்டும் தெம்பு, என அவருக்கு உரிய அடுக்கடுக்கான வசனங்களில் பதிலளித்தார்.

மேலும், யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால் எதையும் சந்திக்க தயாரானால் அரசியலுக்கு வாங்க என்று கமலஹாசனுக்கும், ரஜினிகாந்துக்கும் மறைமுகமாக சவால் விடுத்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

 

Leave a Reply

Your email address will not be published.