டில்லி

பிரதமர் மோடி தனது சொந்த வேலையாக விமானப் பயணம் செய்யும்போதும் ராணுவ விமானத்தில் சலுகைக் கட்டணத்தில் பயணம் செய்துள்ளார் என ஒரு அறிக்கை தெரிவிக்கிறது.

பிரதமர் மோடி தனது சொந்த பணி நிமித்தமாக இதுவரை 128 முறை ராணுவ விமானங்களில் பயணம் செய்துள்ளார். அதற்காக 1999ல் நிர்ணயிக்கப்பட்ட கட்டணப்படி ரூ 89 லட்சம் பிரதமர் அலுவலகத்தில் இருந்து தரப்பட்டுள்ளது.

இதில் அவர் தேர்தல் பிரசாரத்துக்காக சென்ற பயணங்களும் அடங்கும்.  தேர்தல் விதிகளின்படி பிரதமர் தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்லும் போது தனியார் விமானத்தில் செல்ல வேண்டும்.  அரசின் விமானத்தில் செல்லக் கூடாது.  அந்த செலவை பிரதமரின் அலுவலகம் ஏற்றுக் கொள்ளாது.  கட்சியின் நிதியில் இருந்து தரப்பட வேண்டும்.  மேலும் மோடி இதுபோல ராணுவ விமானத்தில் சென்றது தேர்தல் செலவை குறைத்துக் காட்டும் என்பது நிச்சயம் எதிர்க்கட்சிகளின் கவனத்தை ஈர்க்கக்கூடும்.

ஒருமுறை டில்லி – கோரக்பூர் – டில்லி சென்று வர ரூ. 31000 உம், மங்களூர்-கசரகோட்- மங்களூர் செல்ல ரூ 7818ம் தரப்பட்டுள்ளது. இதுவே தனியார் விமானத்தில் சார்ட்டர்ட் ஆக சென்றிருந்தால் பன்மடங்கு ஆகி இருக்கும்.   இது போல பல பயணங்கள் குறிப்பிடத்தக்கவை.  இவை அனைத்தும் மோடிக்காக மட்டுமே இயக்கப்பட்டவை.  எனவே இதை சார்ட்டர்ட் எனத்தான் கணக்கில் கொள்ள வேண்டும்.

மேற்க்கண்ட விவரங்கள் அனைத்தும் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி லோகேஷ் பாத்ராவால் பெறப்பட்டவையாகும்.  இது குறித்து பாத்ரா, “பிரதமரின் சொந்தப் பயணங்களும் தேர்தல் பயணங்களும் தனியார் விமானங்களில் செல்ல வேண்டியவை.  ராணுவ விமானத்தில் அல்ல.  ஒரு அவசரத்துக்கு சென்றார் என வைத்துக்கொண்டாலும், 128 முறை அவசரம் என்பதை ஒப்புக் கொள்ள முடியாது.  பிரதமரின் அலுவலகத்தில் இருந்து இந்தப் பணத்தை வாங்கியது மிகவும் தவறு.  அவர் கட்சிதான் இந்தப் பணத்தை அளிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

பா ஜ க தலைமை இது குறித்து கூறுகையில் பிரதமரின் பாதுகாப்புக்காகவே அவர் ராணுவ விமானத்தில் பயணம் செய்தார் என்றும், இந்தச் செலவை கட்சி நிர்வாகம் பிரதமரின் அலுவலகத்துக்கு திருப்பித் தந்து விடும் எனவும் தெரிவித்துள்ளது.