ரபேல் ஒப்பந்தம் மூலம் இந்தியாவுக்கு மோடி துரோகம்…..ராகுல்காந்தி

டில்லி:

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் மோடி இந்தியாவுக்கு துரோகம் செய்துவிட்டார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ரபேல் போர் விமானம் ஒப்பந்தத்தில் அம்பானியில் ரிலையன்ஸ் நிறுவத்தை பிரான்ஸின் டசால்ட் நிறுவனம் தான் தேர்வு செய்தது. இதில் தங்களது பங்கு எதுவும் கிடையாது என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹலாண்டே கூறுகையில், ‘‘ஒப்பந்தத்திற்கு ரிலைன்ஸ் நிறுவனத்தை பரிந்துரை செய்தது இந்திய அரசு தான். அம்பானி நிறுவனத்துடன் டசால்ட் நிறுவனம் பேச்சுவார்த்தையை நடத்தியது. எங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டதை ஒப்புக்கொண்டோம்’’என்றார்.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில்,‘‘பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்தி ரபேல் ஒப்பந்தத்தில் மாற்றம் கொண்டு வந்துள்ளார். ஹலாண்டேவிற்கு நன்றி.

பிரதமர் தனிப்பட்ட முறையில் கோடி கணக்கான டாலர்கள் மதிப்புள்ள ஒரு ஒப்பந்தத்தை அம்பானிக்கு வழங்கியுள்ளார் என்பது இப்போது தெரிந்துவிட்டது. இதன் மூலம் பிரதமர் மோடி இந்தியாவிற்கு துரோகம் செய்துவிட்டார். இந்திய ராணுவ வீரர்களின் இரத்தத்திற்கு பிரதமர் அவமரியாதை செய்துவிட்டார்’’என்று தெரிவித்துள்ளார்.