டில்லி

ன்று துவங்க உள்ள பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என மோடி வேண்டுகோள் எழுப்பி உள்ளார்.

இன்று முதல் ஜனவரி 5ஆம் தேதிவரை பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நடைபெற உள்ளது.  மத்திய அரசு இந்தக் கூட்டத்தில் 14 மசோதாக்களை தாக்கல் செய்ய உள்ளது.   எதிர்க்கட்சிகள் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள பாதிப்பு, ஜிஎஸ்டி யில் உள்ள குறைபாடுகள், விவசாயிகள் பிரச்னை,  ரஃபேல் விமான கொள்முதல் முறைகேடுகள் போன்ற பல பிரச்னைகளை எழுப்ப உள்ளன.

பாராளுமன்ற தொடர் குறித்து நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.    அப்போது அதில் கலந்துக் கொண்ட பிரதமர் மோடி, இந்த தொடர் சுமுகமாகவும் ஆக்கபூர்வமாகவும் நடக்க எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு தேவை எனவும் அதை எதிர்க்கட்சிகள் அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்..   மேலும் பாராளுமன்ற தேர்தலும், மாநில சட்டசபை தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்துவது பற்றியும் விவாதித்துள்ளார்.

காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆனந்த் சர்மா, “குஜராத் தேர்தல் பிரசாரத்தில் மன்மோகன் சிங்குக்கு பாகிஸ்தானுடன் தொடர்புள்ளதாக பேசியது குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தில் கேள்விகள் எழுப்பினோம்.  எந்த பதிலும் வரவில்லை.   இந்த பிரச்னையை காங்கிரஸ் பாராளுமன்றத்தில் எழுப்ப உள்ளது.  பிரதமர் வருத்தம் தெரிவிக்கும் வரை காங்கிரஸ் ஓயாது” எனத் தெரிவித்துள்ளார்.