கமதாபாத்

குஜராத் மாநிலத்தில் மோடியின் செல்வாக்கு குறைந்து வருவதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

குஜராத் மாநிலத்தில் சமீபத்தில் காங்கிரசுக்கு சாதகமான நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. காங்கிரஸ் செயலராக நியமிக்கப்பட்ட பிரியங்கா காந்தி தனது முதல் உரையை பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்தில் தொடங்கி உள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அகமதாபாத் நகரில் நடந்த காங்கிரஸ் செயல் கமிட்டி கூட்டத்தில் தனது கன்னி உரையை நிகழ்த்தினார்.

அத்துடன் காந்தியின் சபர்மதி ஆஸ்ரமத்தில் தனது முதல் டிவிட்டர் பதிவை பதிந்தார். மற்றொரு முக்கிய நிகழ்வான ஹர்திக் படேல் காங்கிரஸில் இணையும் நிகழ்வும் சமீபத்தில் நடந்துள்ளது. இந்த இரு நிகழ்வுகளின் மூலம் காங்கிரஸ் தொண்டர்கள் புத்துணர்வு அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த புத்துணர்வு எந்த அளவுக்கு வாக்காளர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது எனபதை கண்டறிய செய்தி ஊடகமான “தி குவிண்ட்” ஒரு ஆய்வு நடத்தி உள்ளது.

அந்த ஆய்வு முடிவில் காணப்படுவதாவது :

கடந்த 2014 ஆம் வருட மக்களவை தேர்தலில் பாஜக குஜராத் மாநிலத்தின் அனைத்து தொகுதிகளிலும் அதாவது 26 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. தற்போது காங்கிரசுக்கு வாக்காளர்கள் ஆதரவு 43% ஆக அதிகரித்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தலை ஒப்பிடும் போது இது 50% அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் பாஜகவுக்கு சுமார் 10% வாக்காளர் ஆதரவு எண்ணிக்கை குறைந்துள்ளது.

இந்த ஆய்வின் படி சென்ற தேர்தலில் பாஜக அதிக பெரும்பான்மையுடன் வென்ற ஆறு தொகுதிகள் தற்போது காங்கிரசுக்கு ஆதரவாக மாறி உள்ளது. இதில் மூன்று சவுராஷ்டிரா பகுதியிலும் இரண்டு வடக்கு குஜராத் பகுதியில் ஒன்று மத்திய குஜராத்திலும் உள்ளன.

ஆனந்த் (மத்திய குஜராத்)

மத்திய குஜராத் பகுதியில் உள்ள ஆனந்த் தொகுதி எப்போதுமே காங்கிரஸ் கோட்டை என கருதப்படும் தொகுதியாகும். இதுவரை மூன்று முறை மட்டுமே இந்த தொகுதியில் காங்கிரஸ் தோற்றுள்ளது. முதலில் ராம் ஜென்ம பூமி அலை அடித்த 1989 ஆம் வருடம் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. அடுத்த படியாக 1999 ஆம் வருடம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்த வருடத்திலும் அதற்கு அடுத்தபடியாக மோடி அலை அடித்ததாக கூறப்படும் 2014 ஆம் வருடமும் காங்கிரஸ் தோற்றுள்ளது.

இந்த ஆய்வின் படி தற்போது இந்த தொகுதியில் கங்கிரஸ் மீண்டும் முன்னிலை அடைந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக மூத்த தலைவர் பரத்சிங் சோலங்கி அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே 2002 மற்றும் 2009 ஆம் வருடம் இந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். இம்முறையும் இவருக்கே வெற்றி வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது,

சவுராஷ்டிரா மூன்று தொகுதிகள்

சவுராஷ்டிராவில் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்புள்ள மூன்று மக்களவை தொகுதிகள் ஜுனாகட், அம்ரேலி மற்றும் சுரேந்திர நகர் ஆகிய  தொகுதிளில் உள்ள சட்டப்பேரவை தொகுதிகளில் கடந்த 2017 ஆம் வருட சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் அதிக வாக்குகளுடன்  வென்றுள்ளது. இந்த பகுதி விவசாயிகள் நிறைந்த பகுதியாகும். அத்துடன் படேல் இனத்தவர் அதிகம் உள்ள பகுதியாகும். இந்த இரு தரப்பினரும் தற்போது பாஜக மீது மிகவும் அதிருப்தியில் உள்ளனர்.

கடந்த 2014 ஆம் வருடம் நடந்த தேர்தலில் இந்த பகுதியில் காங்கிரஸ் வெற்றி பெறவில்லை எனினும் கணிசமான வாக்குகல் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வில் காங்கிரஸ் ஜுனாகட் தொகுதியில் 7% மற்றும் அம்ரேலி தொகுதியில் 8% மற்றும் சுரேந்திர நகர் தொகுதியில் 6% முன்னணியில் உள்ளது. கடந்த 2017 சட்டப்பேரவையில் காங்கிரஸுக்கு அதிகரித்த ஆதரவு மேலும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

வடக்கு குஜராத்

வடக்குகுஜராத் பகுதியில் உள்ள பதான் மற்றும் சபர்கந்தா தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி வாய்ப்புள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த இரு தொகுதிகளிலும் ஆதிவாசிகளும் சத்திரியர்களும் அதிகம் உள்ளனர்.

பதான் தொகுதியில் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கடந்த 1998 அம் வருடத்தில் இருந்து மாறி மாறி வெற்றி பெற்று வந்துள்ளன. கடந்த முறை பாஜகவின் லீலாதர்பாய் வாகேலா வெற்றி பெற்ருள்ளார். தற்போது தலித், இஸ்லாமியர் மற்றும் ஆதிவாசிகள் இடையே பாஜக்வுக்கு செல்வாக்கு குறைந்துள்ளதால் இம்முறை காங்கிரசுக்கு வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது.

சபர்காந்தா தொகுதியில் ஆதிவாசிகள் மற்றும் சத்திரியர்கள் இடையே பாஜக மீது அதிருப்தி அதிகரித்துள்ளது. கடந்த 2009 ஆம் வருடம் காங்கிரஸ் இந்த தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றது. தற்போது காங்கிரசுக்கு மேலும் 5% ஆதரவு கூடி உள்ளதால் சபர்காந்தா தொகுதியிலும் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்புள்ள்தாக தெரிய வந்துள்ளது.

மற்ற தொகுதிகளிலும் மக்களிடையே சென்ற தேர்தல் சமயத்தில் இருந்ததை போல் பாஜக மீதான ஆர்வம் தென்படவில்லை என ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த மாநிலத்தில் வர்த்தகர்கள் அதிகம் உள்ளனர். அவர்களில் பலருக்கு பண மதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி அமுலாக்கம் உள்ளிட்ட பாஜக நடவடிக்கைகளால் அதிருப்தி உண்டாகி உள்ளது.

மொத்தத்தில் கடந்த 2014 ஆம் வருடம் நடந்த மக்களவை தேர்தலில் அடித்த மோடி அலை தற்போது அடங்கி வருவதாக பலரும் இந்த ஆய்வில் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.