மோடி கையில் குஜராத் தேர்தல் தேதி முடிவை கொடுத்த தேர்தல் ஆணையம் : சிதம்பரம்

டில்லி

முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் குஜராத் தேர்தல் தேதியை மோடி தெரிவிப்பார் என கிண்டல் செய்துள்ளார்.

குஜராத், இமாசல பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களிலும் தேர்தல் நடத்த வேண்டிய நிலையில் தேர்தல் ஆணையம் இமாசல் பிரதேச தேர்தல் தேதிகளை மட்டுமே அறிவித்துள்ளது.   குஜராத் தேர்தல் தேதிகளை அறிவிக்காததற்கு மத்தியில் ஆளும் பா ஜ க தான் காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இதற்கிடையில் பிரதமர் மோடி வரும் ஞாயிறு அன்று குஜராத் செல்லப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.   அவர் அப்போது வடோதரா நகராட்சியின் சார்பில் பல நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.  அந்த திட்டங்களுக்கான மொத்த மதிப்பு ரூ.1140 கோடி ஆகும்.

இது குறித்து இன்று காலை முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.   குறைந்த கால கட்டத்தில் தற்போது ஐந்து முறை குஜராத் வருகை புரிந்துள்ள பிரதமர் மோடியையும் தேர்தல் ஆணையத்தையும் அந்தப் பதிவில் கிண்டல் செய்துள்ளார்.  அதில் தேர்தல் ஆணையம் குஜராத் மாநில தேர்தல் தேதிகளை மோடி தனது பயணத்தில் அறிவிப்பதற்காக காத்திருக்கிறது என கூறி உள்ளார்.