புதுடெல்லி: சீக்கிய பக்தர்கள் தங்களின் மத நிறுவர் குருநானக்கின் நினைவிடம் அமைந்திருக்கும் கர்தார்பூர் ஸ்தலத்திற்கு செல்வதற்கானபாதையை வரும் நவம்பர் 8ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைப்பார் என்று மத்திய அமைச்சர் ஹர்சிம்ரன் கவுர் பாதல் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தின் நரோவல் மாவட்டத்தில் அமைந்துள்ள கர்தார்பூரில்தான் சீக்கிய மத நிறுவனர் குருநானக்கின் நினைவிடம் உள்ளது. சீக்கியர்களின் முக்கியமான புனிதஸ்தலமாக விளங்கும் அ‍ங்கே, இந்தியாவிலிருக்கும் சீக்கிய பக்தர்கள் எளிதில் சென்றுவர முடியாத நிலை இருந்தது.

இந்நி‍லையில், இந்தியாவிலிருந்து விசா இல்லாமலேயே எளிதாக கர்தார்பூருக்கு சென்றுவர, இந்தியா – பாகிஸ்தானிடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, தனிப்பாதை அமைக்க முடிவு ச‍ெய்யப்பட்டது. சுற்றுலா வருமானம் கருதி பாகிஸ்தானும் இந்த விஷயத்தில் மும்முரமாக ஈடுபட்டது.

பஞ்சாப் எல்லையிலிருந்து, சுமார் 14 கி.மீ. வரை அமைக்கப்பட்டுள்ள பாதையை திறப்பதற்கான பூர்வாங்க பேச்சுவார்த்தைகள் முடிவடைந்துள்ளன. நாள் ஒன்றுக்கு 5000 யாத்ரிகர்களை அனுமதிக்க பாகிஸ்தான் ஒப்புக் கொண்டுள்ளது.

இந்நிலையில்தான், இந்தியப் பிரதமர் மோடி, கர்தார்பூருக்கு செல்லும் பாதையை நவம்பர் 8ம் தேதி திறந்து வைப்பார் என்று மத்திய அமைச்சர் ஹர்சிம்ரன் கவுர் கூறியுள்ளார். இவ்விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரும் கலந்துகொள்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.