மோடி மீண்டும் பிரதமர் ஆக மாட்டார் : பாஜக ஆதரவு சேனலின் கருத்துக் கணிப்பு

டில்லி

பாஜக ஆதரவு செய்தி தொலைக்காட்சியான டைம்ஸ் நவ் தனது கருத்துக் கணிப்பில் மோடி மீண்டும் பிரதமர் ஆக மாட்டார் என தெரிவித்துள்ளது.

இந்த வருடம் நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜக கடுமையாக முயன்று வருகிறது. பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முயன்று வருகின்றன. உத்திரப் பிரதேசத்தில் பாஜகவுக்கு எதிராக சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. பாஜகவின் தற்போதைய கூட்டணி கட்சிகளும் கூட்டணியில் இருந்து விலகத் தொடங்கி உள்ளன.

நடைபெற உள்ள தேர்தல் முடிவுகள் குறித்து இந்த மாத தொடக்கத்தில் இருந்தே கருத்துக் கணிப்புக்களை தொலைக்காட்சிகள் நடத்தி வருகின்றன. இதுவரை இது போல் மூன்று கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்தியா டுடே உள்ளிட்ட ஊடகங்கள் நடத்திய அந்த கருத்துக் கணிப்பில் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவின் நடவடிக்கைகளால் உத்திரப் பிரதேசத்தில் பாஜகவுக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டு பாஜகவுக்கு 15 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என கூறப்பட்டது.

மற்றொரு கணக்கெடுப்பில் உத்திரப் பிரதேச மாநிலத்தில் மட்டும் பாஜகவுக்கு 40 இடங்கள் கிடைக்கலாம் எனவும் பகுஜன் சமாஜுக்கு 15 இடங்களும் சமாஜ்வாதிக்கு இரு இடங்களும் கிடைக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது. உத்திரப் பிரதேச மாநிலத்தில் வெல்லும் கட்சியே ஆட்சியை பிடிக்க முடியும் என்பதால் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைப்பது கடினம் என கூறப்பட்டுள்ளது.

தற்போது பாஜகவின் ஆதரவு செய்தி தொலைக்காட்சி என கூறப்படும் டைம்ஸ் நவ் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில், “பாஜகவுக்கு மொத்தம் 252 இடங்களில் வெற்றி கிடைக்கும். அதாவது பெரும்பான்மைக்கு 21 இடங்கள் குறைவாகவே பாஜகவுக்கு கிடைக்கும். காங்கிரஸ் கட்சிக்கு 147 இடங்கள் கிடைக்கும். பாஜகவுக்கு எதிரான மற்ற கட்சிகளுக்கு 144 இடங்கள் கிடைக்கும்.

உத்திரப் பிரதேச மாநிலத்தில் கடந்த தேர்தலில் 80 இடங்களில் 73 இடங்களில் வென்று மோடியின் மாயாஜாலம் நிகழ்ந்தது. தற்போது காங்கிரஸ் மெகா கூட்டணி அமைக்காத நிலையிலும் கூட பாஜகவினால் 27 இடங்களில் மட்டுமே வெல்ல முடியும் என தெரிகிறது. காங்கிரசுடன் பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கூட்டணி அமைந்தால் அந்த கூட்டணிக்கு51 இடங்களில் வெற்றி நிச்சயமாகும். கூட்டணி அமையாவிட்டாலும் காங்கிரசுக்கு அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் வெற்றி நிச்சயம்” என தெரிவித்துள்ளது.

கார்ட்டூன் கேலரி