புதுடெல்லி: அமெரிக்காவிலுள்ள பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷனிடமிருந்து ஸ்வாச் பாரத் அபியான் திட்டத்திற்காக விருது பெறவுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

இந்த செப்டம்பர் மாத இறுதியில் அமெரிக்கா செல்லவுள்ள மோடிக்கு, அந்த ஃபவுண்டேஷன் சார்பில் விருது வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ஸ்வாச் பாரத் அபியான் திட்டம் தொடர்பாக பிரதமர் மோடியின் ஊக்கமுள்ள மற்றும் புத்தாக்கம் வாய்ந்த முயற்சிகள் உலகின் பிற பகுதிகளிலும் அங்கீகரிக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார் பிரதமர் அலுவலக இணையமைச்சர் ஜிதேந்திர சிங்.

பிரதமர் பெறக்கூடிய இந்த விருதானது, ஒவ்வொரு இந்தியனுக்கு பெருமை சேர்க்கக்கூடிய ஒரு விஷயமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2014ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த திட்டம், வீடுகளுக்கு கழிவறை கட்டுதல், பொதுக் கழிவறை கட்டுதல் மற்றும் கழிவுகள் மேலாண்மை செய்தல் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.