டில்லி

பொய்ச் செய்தி பரப்பும் பத்திரிகையாளர்களுக்கு உரிமம் ரத்து செய்யப்படும் என்னும் ஸ்மிரிதி இராணி உத்தரவுக்கு பிரதமர் மோடி தடை விதித்துள்ளார்.

அமைச்சர் ஸ்மிரிதி இராணியின் தலைமையில் மத்திய செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை அமைச்சகம் இயங்கி வருகிறது.    அந்த அமைச்சகம் இன்று பத்திரிகையாளர்கள் பொய்ச் செய்திகளை பரப்புவதாக குற்றம் சாட்டியது.  அத்துடன் அவ்வாறு செய்வோருக்கு முதல் முறை 6 மாதங்களுக்கு பத்திரிகையாளர் உரிமம் பறிக்கப்படும் எனவும், இரண்டாம் முறை ஒரு வருடம் உரிமம் பறிக்கப்படும் எனவும் மூன்றாம் முறை வாழ்நாள் தடை விதிக்கப்படும் எனவும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவு பத்திரிகையாளர்களிடையே கடும் அதிருப்தியை உண்டாக்கியது.   இதற்கு காங்கிரஸ் உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன.    பொய்ச் செய்தி அளிப்போர் என்னும் பெயரில் பத்திரிகையாளர்கள் மீது அடக்குமுறையை அளிக்கவே இவ்வாறு மோடி அரசு செய்துள்ளதாக குற்றம் சாட்டியது.

மத்திய செய்தி மற்றும்  மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் தனது டிவிட்டர் பக்கத்தில், “பொய்ச் செய்தி பரப்புவோர் பற்றிய அமைச்சக உத்தரவுக்கு கருத்து தெரிவிப்போருடன் விவாதம் நடத்தத் தயார்” என அறிவித்தார்.  அந்தப் பதிவில் அவருக்கு பத்திரிகையாளர்களும் பொது மக்களும் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பதில் அளித்தனர்.

இந்த அறிவிப்பு வெளியாகி ஒரு சில நிமிடங்களில் பிரதமர் மோடி இந்த உத்தரவை  திரும்பப் பெறுவதாக  அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.    மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணியின் உத்தரவுக்கு பிரதமர் மோடி தடை விதித்தது பத்திரிகையாளர்களிடையே பரபரப்பை உண்டாக்கி உள்ளது.