மகேந்திரசிங் தோனிக்கு நீண்ட கடிதம் எழுதி வாழ்த்திய பிரதமர் மோடி!

புதுடெல்லி: சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற முன்னாள் இந்தியக் கேப்டன் தோனிக்கு, நீண்ட கடிதம் ஒன்றை எழுதி வாழ்த்தியுள்ளார் பிரதமர் மோடி.

அக்கடிதத்தை, தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து நன்றி கூறியுள்ளார் மகேந்திரசிங் தோனி.

அக்கடிதத்தில் இடம்பெற்றிருப்பதாவது;

என் அன்பிற்குரிய மகேந்திர சிங் தோனி,

ஆகஸ்ட் 15ம் தேதியன்று உங்களுக்கே உரிய தன்னடக்க முத்திரையுடன் சிறு வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தீர்கள். இது ஒன்றே ஒரு நாடு முழுதும் நேயத்துடன் கூடிய நீண்ட உரையாடல் புள்ளியாக அமைந்தது. 130 கோடி இந்தியர்களும் உங்கள் முடிவைக் கண்டு ஏமாற்றமடைந்தார்கள்; ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக நீங்கள் இந்திய கிரிக்கெட்டுக்கு ஆற்றிய பணிகளுக்காக நிரந்தர நன்றியுடையவர்களானார்கள்.

உங்கள் கிரிக்கெட் வாழ்க்கையை அறுதியிடுவதன் ஒரு வழி புள்ளிவிவரங்களைக் கொண்டு அணுகுவதாகும். நீங்கள் சிறந்த வெற்றி கேப்டன்களில் ஒருவர். இந்தியாவை உலக அளவில் முன்னிலைக்குக் கொண்டு சென்றதில் நீங்கள் மிக முக்கிய காரணி. மிகப்பெரிய பேட்ஸ்மேன், மிகப்பெரிய கேப்டன்களில் ஒருவர், நிச்சயமாக கிரிக்கெட் இதுவரை பார்த்ததில் சிறந்த விக்கெட் கீப்பர் என்று வரலாற்றில் உங்கள் பெயர் இடம்பெறும்.

கடினமான சூழ்நிலைகளில் உங்கள் மீதான நம்பகத்தன்மை, நீங்கள் போட்டிகளை வெற்றிகரமாக நீங்கள் முடிக்கும் பாணி, குறிப்பாக 2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டி எப்போதும் பல தலைமுறைகளுக்கு பொதுமக்கள் நினைவில் மறையாமல் நிற்கும்.

ஆனால் மகேந்திர சிங் தோனி என்ற பெயர், அவரின் கிரிக்கெட் புள்ளி விவரங்களுக்காக மட்டுமோ அல்லது குறிப்பிட்ட மேட்ச்-வின்னிங் பங்களிப்புக்காக மட்டுமோ நினைவில் கொள்ளத்தக்கதல்ல. உங்களை விளையாட்டு வீரராக மட்டும் பார்ப்பது நியாயமல்ல. உங்கள் தாக்கத்தை ஒரு நிகழ்வு என்பதாகப் பார்ப்பதே மிகச்சரியானது!

சிறிய ஊரில் எளிமையான ஒரு ஆரம்பம் கொண்ட நீங்கள் தேசிய அளவில் உயர்ந்து உங்களுக்கான பெயரை உருவாக்கிக் கொண்டீர்கள். முக்கியமாக இந்தியாவையே பெருமை கொள்ளச் செய்தீர்கள். அதன்பிறகு உங்கள் எழுச்சியும் நடத்தையும் கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு ஊக்கத் தூண்டுகோலாக அமைந்தது. இந்த இளைஞர்கள் வசதியான பள்ளிகளுக்கோ, கல்லூரிகளுக்கோ சென்றவர்கள் அல்லர் அல்லது சிறப்பு மிக்க குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் அல்லர்.

ஆனால் உயர்ந்த மட்டத்தில் தங்களை தனித்துவம் மிக்கவர்களாக்கிக் கொள்வதில் திறமை மிக்கவர்கள். புதிய இந்தியா என்ற உணர்வின் முக்கிய உதாரணங்களில் நீங்கள் ஒருவர். இங்கு குடும்பப் பெயர்கள் மக்களின் விதியை தீர்மானிப்பதில்லை, இவர்கள் தங்கள் பெயர்களையும் தங்கள் விதிகளையும் தாங்களே தீர்மானிப்பவர்களாக இருக்கிறார்கள்.

நாம் எதை நோக்கி முன்னேறிச் செல்கிறோம் என்பது நமக்குத் தெரிந்திருக்கும் பட்சத்தில் நாம் எங்கிருந்து வந்தோம் என்பது முக்கியமேயல்ல. இந்த உணர்வைத்தான் நீங்கள் இளைஞர்களிடத்தில் உருவாக்கியுள்ளீர்கள், அவர்களுக்கு அகத் தூண்டுகோலாக இருந்துள்ளீர்கள். களத்தில் உங்களது மறக்க முடியாத தருணங்கள் ஒரு குறிப்பிட்ட தலைமுறை இந்தியர்களை உதாரணமாக எடுத்துக் காட்டி விளக்குகிறது. இந்தத் தலைமுறை இந்தியர்கள் கடினமான முயற்சிகளை எடுக்கத் தயங்குவதில்லை. கடினமான சூழ்நிலைகளிலும் தங்கள் திறமை மேல் நம்பிக்கை கொண்டு செயல்படுகின்றனர். இது எனக்கு, அதிகம் அனுபவம் இல்லாத இளைஞர்கள் நெருக்கடியான தருணங்களில் இறங்கி ஆடுவதற்கு நீங்கள் அவர்களை ஆதரித்து ரிஸ்குகளை எடுத்ததை ஒத்ததாக தோன்றுகிறது.

2007ம் ஆண்டின் டி-20 உலகக்கோப்பை இறுதிப் போட்டி இந்த உணர்வின் துல்லியமான உதாரணமாகும். இந்தத் தலைமுறை இந்தியர்கள் தீர்மானகரமான சூழ்நிலைகளில் பதற்றமடைவதில்லை. இதனை நாங்கள் உங்களது பல இன்னிங்ஸ்களில், ஆட்டங்களில் பார்த்திருக்கிறோம். தீங்கான சூழ்நிலையிலும் நம் இளைஞர்கள் மனம் தளர்ந்து விடுவதில்லை நீங்கள் வழிநடத்திய அணி போல் இவர்களும் அச்சமற்றவர்களாக இருக்கின்றனர். நீங்கள் என்ன மாதிரியான சிகை அலங்காரத்தில் இருந்தாலும் வெற்றியிலும் தோல்வியிலும் உங்கள் எண்ணம் ஒரே மாதிரியாகவே உள்ளது.

இது ஒவ்வொரு இளைஞருக்கும் முக்கியமான பாடமாகும். இந்திய ராணுவத்தில் நீங்கள் சேர்ந்து பணியாற்றியதையும் நான் குறிப்பிட்டாக வேண்டும். நம் ராணுவ வீரர்களுடன் இருந்தபோது நீங்கள் அதிக மகிழ்ச்சியாக இருந்தீர்கள். அவர்களது ஷேம நலத்தின் மீதான உங்கள் அக்கறை உண்மையில் பாராட்டத்தக்கது. சாக்‌ஷியும் ஸிவாவும் உங்களுடன் நிறைய நேரம் செலவிடுவார்கள் என்று நம்புகிறேன். அவர்களுக்கு என் ஆசிகளையும் பகிர்கிறேன். அவர்களது தியாகங்கள், ஆதரவு இல்லாமல் எதுவும் சாத்தியமல்ல. தொழில்ரீதியான வாழ்க்கைக்கும், சொந்த வாழ்க்கைக்குமான சமநிலையைப் பேணுவதிலும் உங்களிடமிருந்து இளைஞர்கள் கற்றுக்கொள்ள முடியும்.

ஒரு தொடரில் மற்றவர்கள் அணியின் வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருந்த போது, நீங்கள் உங்கள் அழகான குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்த படத்தைப் பார்த்தது என் நினைவில் உள்ளது. அதுதான் உயர்தர தோனி! உங்கள் எதிர்கால முயற்சிகள் சிறப்புற வாழ்த்துக்கள்..! என்று எழுதியுள்ளார் மோடி.