சென்னை:

சீன அதிபர் நாளை சென்னை வர உள்ள நிலையில், சென்னையில் நாளை மற்றும் நாளை மறுதினமும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக, சென்னையியில் தாம்பரம் முதல் பாரிமுனை வரை சாலைகளில் கடும் வாகன நெரிசல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மேலும், ஓஎம்ஆர், ஈசிஆர் சாலைகளிலும் வாகன நெரிசல் ஏற்படும் அபாயம் உள்ளது.  இதன் காரணமாக பொதுமக்கள் நாளை சென்னையின் பிரதான சாலைகளில் பயணம் செய்வதை தவிர்ப்பது நல்லது.

சீன அதிபரும் பிரதமர் மோடியும் நாளை சென்னை வருவதை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக நாளை மற்றும் மறுநாள் சென்னையில் பல இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல் துறை செய்தி வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது

சென்னை விமான நிலையம் முதல் கத்திப்பாரா சாலை, கத்திப்பாரா முதல் சின்ன மலை வரை, சர்தார் வல்லபாய் படேல் சாலை, ராஜீவ் காந்தி மற்றும் கிழக்கு கடற்கரை சாலை ஆகிய இடங்களில் கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்படுவதால் போக்குவரத்து அதிகரித்து தாமதமாக செல்ல வாய்ப்பு உள்ளது.

எனவே அந்த சாலைகளில் அமைத்துள்ள கல்வி நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் போன்றவற்றில் வேலை செய்பவர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது பயணத்திட்டங்களையும் வழித்தடங்களையும் முன்னேற்பாட்டோடு அமைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

கனரக வாகனங்கள், சரக்கு வாகனங்கள், டேங்கர் லாரிகள் போன்ற வாகனங்கள் இந்த 2 நாட்களுக்கு காலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரை மேலே குறிப்பிட்ட சாலைகளில் அனுமதிக்கப்பட மாட்டாது. 

அக்டோபர் 11ஆம் தேதி அன்று மதியம் 12:30 முதல் 2:00 மணிவரை பெருங்களத்தூரி இருந்து நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் ஜி.எஸ்.டி சாலை நோக்கி அனுமதிக்கப்படாமல் ‘O’ பாயிண்ட் சந்திப்பில் இருந்து மதுரவாயல் புறவழிச்சாலை வழியாக திருப்பிவிடப்படும்.

சென்னை தென்பகுதியில் இருந்து வடக்கு பகுதிகளுக்கு வரும் அனைத்து வாகனங்களும் பல்லாவரம் ரேடியல் ரோடு வழியாக, குரோம்பேட்டை – தாம்பரம் வழியாக மதுரவாயல் புறவழிச்சாலையைப் பயன்படுத்தி செல்லலாம்.

தாம்பரம் மற்றும் குரோம்பேட்டை பகுதிகளில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் பல்லாவரம் ரேடியல் சாலையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.  மேலும் பல்வேறு போக்குவரத்து மாற்றங்களும் அறிவிக்கப்பட்டு உள்ளது.