சென்னை:

பிரதமர் மோடி, சீன அதிபர் ஜிஜின்பிங் சந்திப்புக்கு எதிராக முழக்கமிட்டதால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட 13 திபெத்தியர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.

கடந்த 12 மற்றும் 13ந்தேதி மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த நிகழ்ச்சி காரணமாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.  சென்னை முதல் மாமல்லபுரம் வரை பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த நிலையிலும், பெங்களூருவில் இருந்து வந்த 2 பெண்கள் உள்பட 6 திபெத்தியர்கள், சென்னை விமான நிலையம் அருகே சீன அதிபருக்கு எதிராக கோஷ மிட்டனர். அவர்களை போலீசார் உடனடியாக கைது செய்தனர்.

இதேபோல், சீன அதிபர் தங்கவிருக்கும் கிண்டி ஐடிசி சோழா ஓட்டலுக்கு அருகே 6 திபெத்தியர்கள், சீனர்களை போல் வந்து கோஷம் எழுப்பினர். அவர்களும் உடனடியாக கைது செய்யப்பட்டனர். மாமல்லபுரத்தில் 3 திபெத்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.” சென்னையிலும், மாமல்லபுரத்திலும் சீன அதிபருக்கு எதிராக முழக்கமிட்ட 15 திபெத்தியர்களை போலீசார் கைது செய்தனர்.

இவர்களில் 13 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களை தமிழகஅரசு விடுதலை செய்து உத்தரவிட்டு உள்ளது.

சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் விடுதலை கோரி நீண்ட காலமாக சுதந்திரப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதையடுத்து, சீன அதிபர் எந்த நாட்டுக்கு சென்றாலும் அந்த நாட்டில் வசிக்கும் திபெத்தியர்கள் அவருக்கு எதிராக போராட்டங்கள் நடத்துகிறார்கள். பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகமாக இருந்தாலும் ஏதாவது ஒரு பகுதியில் அவர்கள் திரண்டு சீன அரசுக்கு எதிராக முழக்கமிடுவார்கள். அதுபோல சென்னையில் கோஷமிட்டவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.