மோடியின் “பணமில்லா பரிவர்த்தனை யாருக்காக? மறைக்கப்படும் பகீர் தகவல்கள்!

 

க.மாரிமுத்து

“கேஷ்லெஸ் இந்தியா” என்று முழங்கி வருகிறார் பிரதமர் மோடி. மக்களும் வேறு வழியின்றி இந்த முறைக்க மாற வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.

வங்கியில் கால் கடுக்க வரிசையில் நின்றாலும், தேவையான பணத்தை எடுக்க முடிவதில்லை. அரசு அறிவிப்புக்கும் மாறாக, மிகக் குறைந்த தொகையையே வங்கியில் அளிக்கப்படுகிறது. ஏ.டி.எம்.களில் பெரும்பாலனவை செயலற்று கிடக்கின்றன.

ஆகவேதான்,  பேடிஎம் போன்ற மொபைல் செயலிகளுக்கு மாறி விடலாமா  என்ற எண்ணம் பெரும்பாலோனோருக்கு ஏற்பட்டுவிட்டது.

ஆகவேதான் “பே.டி.எம்.”முக்கு மாற பலரும் விரும்புகிறார்கள். இந்த பேடிஎம் என்றால் என்ன என்று பார்ப்பதற்கு முன்னால் வேறு சில விசயங்களை நாம் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

500,1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் அறிவித்த மறநாளே..  இதற்காகவே காத்திருந்தது போல பேடிஎம் குறித்த விளம்பரம் பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் பெரும்பாலான நாளிதழ்களில் வெளியானது.

“மோடியின் செல்லாது அறிவிப்புக்குப் பிறகு, பேடிஎம் நிறுவனத்தின் மூலம் பணப் பரிவர்த்தனை நடைபெறுவது பலமடங்காக அதிகரித்துள்ளது.

தினமும் 70 லட்சம் புதிய பரிமாற்றங்களின் மூலம், 120 கோடி ரூபாய் அளவுக்கு பேடிஎம்  மூலமாக மக்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.  இந்த அளவுக்கான பரிமாற்றம் சில மாதங்களுக்குப் பிறகு நடக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் சில நாட்களிலேயே இந்த இலக்கை அடைந்துவிட்டோம்” என்று  அந் நிறுவனத்தில் துணைத் தலைவர் சுதான்ஷு குப்தா தெரிவித்திருக்கிறார்.  உற்சாகத்தோடு சொல்கிறார்.

இந்த பேடிஎம் நிறுவனம், ஒரு சுதேசி நிறுவனம்.. அதாவது இந்திய நிறுவனம் என்கிறார் அதன் நிறுவனர் விஜய் சேகர் ஷர்மா.

ஆனால் இந்த  நிறுவனம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன.

2010 ஆம் ஆண்டில்தான் இந்நிறுவனம் துவக்கப்பட்டது. அதுவும் மொபைல் ரீ சார்ஜ் செய்வதற்கான நிறுவனம்தான்.

இன்றோ பெரும்பாலானஇந்தியர்களின் பணத்தை கையாளும் திறன் கொண்டதாக இந்நிறுவனம் எப்படி வளர்ந்தது? பிரதமர் மோடியே,ப்பது ஏன்  என்ற கேள்விகள் எழுகின்றன.

2015 ஆம் ஆண்டு மார்ச் மாத்தில், தொழிலதிபர் ரத்தன் டாடா பேடிஎம் நிறுவனத்தில் முதலீடு செய்கிறார். அதே மாதத்தில் அலிபாபா மற்றும் அதன் துணை அமைப்பான ஆன்ட் ஃபினான்சியல்(Ant Financial) ஆகிய நிறுவனங்கள் 700 மில்லியன் டாலர் எனும் பெரும் தொகையை  இந்த நிறுனத்தில் முதலீடு செய்கின்றன.

இ-காமர்ஸ் எனப்படும் இணைய வணிகத்தில் உலக அளவில் முதலிடத்தில் இருக்கும் நிறுனம்தான் அலிபாபா.

அதனால் என்ன என்கிறீர்களா..

இது ஒரு அக்மார்க் சீன நிறுவனம்!\

அது மட்டுமல்ல..பேடிஎம் நிறுவனத்தின் அங்கமாக இருக்கும் ஒன்டிஎம் நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகள் சீன நிறுவனத்தின் வசம் இருக்கின்றன. ஆகவே, பேடிஎம் ஒரு சீன நிறுவனம் என்றே பலரும் கருதுகிறார்கள்.

அடுத்த விசயத்துக்கு வருவோம்..

பேடிஎம், தனது தொழிலை விரிவு படுத்தும் நோக்கத்துடன் ஐசிஐசிஐ வங்கியிடம், 2016 மார்ச் மாதத்தில், 300 கோடி ரூபாய் கடனாகப் பெறுகிறது.

 

பேடிஎம் நிறுவனம் துவங்கப்பட்டவுடனேயே சொல்லிவைத்தாற்போல  ரத்தன் டாட்டா முதலீடு செய்வதும், பின்னர் ஒரு சீன நிறுவனம் மிகப் பெரிய அளவில் பணத்தைக் கொட்டுவதும் நடக்க…

தற்போது இந்தியாவில் ஆன் லைன் மூலமாகத்தான் இனி பணப்பரிமாற்றம் நடைபெற வேண்டிய கட்டாயத்துக்கு இந்தியர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

இரண்டையும் முடிச்சுப்போட்டுப் பாருங்கள்.

“சரி, இது எதிர்பாரத விதமாக நடந்த செயலாகவே இருக்கட்டும். ஆனால் சீன நிறுவனம் மூலமாகத்தான் இந்தியர்களின் பணப்பறிமாற்றம் நடக்க வேண்டுமா” என்ற குரலும் எழுகிறது.

மேலும், இந்தியாவின் முதல் பேமெண்ட் வங்கியாக பேடிஎம் இந்திய ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்டது. கூடவே, ரிலையன்ஸ் நிறுவனம், பாரதி ஏர்டெல், வோட ஃபோன் என 11 பெரிய நிறுவனங்கள் அங்கீகாரம் பெற்றிருக்கின்றன.

நம்முடைய பணத்தை கணிசமாக இந்த நிறுவனக் கணக்குகளில் வங்கி மூலமாக பரிமாற்றம் செய்து விட்டால்,  நாம் நேரடியாக பணத்தை கையாளாமல், ஆன் லைன் மூலமாகவே நமக்கு வேண்டியதை வாங்கிக்கொள்ளலாம்.

அதற்கான கமிஷன் தொகையை கோடி கோடி கோடியாக இந்த நிறுவனங்கள் குவிக்கும்.

ஆக நமது பணத்தை, நமது விருப்பங்களை.. ஏன், நமது எண்ணங்களைக்கூட இனி இந்த கார்பரேட் நிறுவனங்கள்தான் தீர்மானிக்கப்போகின்றன.

இப்டி இல்லாமல், வேறு ஒரு நல்ல நடவடிக்கையை பிரதமர் மோடி எடுத்திருக்கலாம் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

“பேமெண்ட் வங்கியாக அங்கீகாரம் பெற்ற 11 அமைப்புகளில் நமது அஞ்சல் துறையும் உண்டு.  6 லட்சம் இந்திய கிராமங்களில், சுமார் 1 லட்சத்து 54 ஆயிரம் கிளைகளுடன் அஞ்சலகங்களுடன் வலுவான கட்டமைப்பைப் பெற்றிருக்கிறது. ஆனால் பிரதமர் மோடி உட்பட எவரும் இது குறித்து பேசவே இல்லை என்பதில் இருக்கிறது சூட்சமம்.

ஆனால் அஞ்சலகங்கள் குறித்து ஏற்கெனவே இதே மத்திய அரசு பேசியது. 2015 – 16 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்தபோது, நிதியமைச்சர் அருண் ஜேட்லீ இது பற்றி தெரிவித்தார்.  முன்னாள் அமைச்சரவை செயலாளர் டிஎஸ்ஆர் சுப்பிரமணியன் தலைமையில் இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழு தனது அறிக்கையை சமர்ப்பித்தது.

நகர பகுதி மக்களுக்கு கிடைக்கும் அத்தனை  சேவைகளையும், கிராமப்புற மக்களுக்கும் அளிக்கும் வகையில்  அஞ்சல் நிலையங்கள், “போஸ்ட் பேங்க் ஆஃப் இந்தியா” வாக செயல்படச் செய்ய வேண்டும். வங்கி, காப்பீடு மற்றும் இணைய வணிகம் என அனைத்தையும் கையாளும் விதத்தில் அஞ்சல் துறை மேம்படுத்தப்படவேண்டும். இப்படிச் செய்தால்,  அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில் 5 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தலாம் என்று  தெரிவிக்கப்பட்டிருந்தது.

அஞ்சல் நிலைய ஊழியர்கள் மட்டுமல்லாமல், முகவர்களையும் பயன்படுத்தினால், பணமற்ற பரிவர்த்தனை என்ற பிரதமரின் எதிர்பார்ப்பு சிறு கிராமங்களையம் சென்றடையும்.

“நிஜமாகவே நாட்டில் பொருளாதார புரட்சியை ஏற்படுத்த பிரதமர் மோடி விரும்பினால், இதை நமது பெண்களிடம் ஒப்படைக்க வேண்டும். POS எனப்படும் பாயின்ட் ஆஃப் சேல் கருவிகளை மகளிருக்கு வழங்கி, அவர்களை பிரதிநிதிகளாக நியமிக்கலாம். இதனால் மக்களின் நம்பகத்தன்மையையும் பெறமுடியும், திட்டமும் மிகப்பெரிய வெற்றியடையும். பேடிஎம் போன்ற கார்பரேட் நிறுவனங்களிடம் குவியும் கமிஷன் தொகை, இந்திய மகளிருக்கு பரவலாக்கப்படுவதன் மூலம் லட்சக்கணக்கான குடும்பங்கள் பயனடையும்” என்கிறார்கள் நாட்டு நலனில் அக்கறை கொண்ட பொருளாதார நிபுணர்கள்.

அதாவது அஞ்சலகத்தைப் பயன்படுத்துங்கள் என்று அரசை நோக்கி வேண்டுகிறார்கள் இவர்கள்.

ஆனால் பிரதமர் மோடியோ, பேடிஎம் என்கிற தனியார் நிறுவன விளம்பரங்களில் தோன்றி, அங்கே இழுக்கிறார் நம்மை!

ஆக, கேஷ்லெஸ் இந்தியா என்கிற மோடியின் திட்டம், கார்பரேட் நிறுவனங்களுக்கு கேஷ்  குவிக்கும் திட்டமே.

You may have missed