குஜராத் தேர்தல் முடிவால் மோடியின் பிம்பம் தகர்ப்பு: ராகுல் காந்தி

அகமதாபாத்,

டைபெற்று முடிந்துள்ள குஜராத் தேர்தல் முடிவுகள் மூலம் பிரதமர் மோடியின் பிம்பம் தகர்ந்துள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.

குஜராத், இமாச்சல சட்டப்பேரவை  தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. குஜராத்தில் நடைபெற்ற 182 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவில், பாஜக 99 இடங்களிலும், காங்கிரஸ் 77 இடங்களிலும் வெற்றி பெற்றன.

கடந்த 2012ம் ஆண்டு தேர்தலின்போது 116 இடங்களை பெற்றிருந்த பாஜ தற்போது 99 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. இது பாஜகவின் வீழ்ச்சிக்கு முதல்படி என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், குஜராத் தேர்தல் முடிவு குறித்து அகில இந்திய  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது:

”குஜராத் தேர்தலில் பிரதமர் மோடியின் வளர்ச்சி அரசியல் தோல்வியடைந்துள்ளது என்பது இந்த தேர்தல் வாயிலாக தெரிய வந்துள்ளது. பிரதமர் மோடியின் பிம்பத்தை குஜராத் மக்கள் நிராகரித்து விட்டனர். அவரது பிரச்சாரமும் தோல்வியடைந்துள்ளது.

குஜராத் தேர்தல் முடிவுகள் பிரதமர் நரேந்திர மோடியின் மீதான நம்பிக்கை குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. பிரதமர் மோடியின் மனதில் கோபமே நிறைந்து இருக்கிறது.  கோபத்தால் சாதிக்க முடியாது. அன்பால் மட்டுமே எதையும் சாதிக்க முடியும் என்பதை குஜராத் தேர்தல் முடிவுகள் பிரதமருக்கு உணர்த்தியுள்ளது” எனக் கூறினார்.

மேலும்,  காங்கிரசுக்கு நியாயமான வெற்றி கிடைத்துள்ளது. எங்களுக்கு கிடைத்த ஓட்டுக்கள் மூலம், குஜராத் மக்கள் மோடி மீதான நம்பிக்கையை குறைத்துள்ளது. குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சியமைக்க முடியாவிட்டாலும், காங்கிரஸுக்கு மக்கள் ஆதரவு உள்ளது என்று கூறினார்.

குஜராத் தேர்தலின்போது, மோடி தன்னை பற்றியே பெருமையாக பேசினார்.  பிரசாரத்தில் மோடி ஊழல் குறித்து ஏன் பேசவில்லை என்று கேள்வி எழுப்பிய ராகுல,  அவரது தவறான தகவல்களுக்கு மக்கள் பாடம் புகட்டியுள்ளனர். மோடியின் குஜராத் மாடல் குழியில் தள்ளப்பட்டுள்ளது என்றார்.

இந்த தேர்தல் முடிவு மூலம், பா.ஜ.,வுக்கு நாங்கள்  நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம்.எங்களின் கடுமையான உழைப்புக்கு போதிய பரிசு கிடைத்துள்ளது.  நாங்கள் நல்ல பாடமும் கற்றுள்ளோம். குஜராத், இமாச்சலில் ஆட்சியமைக்க முடியாவிட்டாலும் மக்களின் ஆதரவு காங்கிரஸிற்கு உள்ளது என்று கூறினார்.

மேலும், குஜராத்தை வளர்ச்சியடைய செய்ததாக பிரதமர் மோடி கூறிவருவது பொய் என்பது தேர்தல் முடிவின் மூலம் நிரூபணமாகியுள்ளது. குஜராத்தில் மோடி என்ற தனிமனிதரின் பிம்பத்தின் மீதான தாக்கம் குறைந்துள்ளது.  பாஜகவினர் என்ன மாதிரியான எதிர்மறை உக்திகளையும் சக்திகளையும் பயன்படுத்தினாலும் சரி. காங்கிரஸார் அன்புடனும் நட்புடனும் அவற்றையெல்லாம் எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும்.

2 மாநில தேர்தலின் முடிவு வெறும் ஆரம்பம்தான். காங்கிரஸின் “கை”யை இன்னும் வலுவடைய செய்ய கட்சியினர் பணியாற்ற வேண்டும்

இவ்வாறு ராகுல் கூறினார்.

You may have missed