காஷ்மீர் விஷயத்தில் மோடியின் நடவடிக்கைகள் சரியல்ல: முன்னாள் ‘ரா’ தலைவர்

புதுடெல்லி: காஷ்மீர் விஷயத்தில் மோடி அரசு பின்பற்றிவரும் கடுமையான போக்கு பலன்தராது என்று கூறியுள்ளார் ‘ரா’ முன்னாள் தலைவர் ஏ.எஸ். துலாத்.

ஒரு நேர்காணலில் அவர் கூறியுள்ளதாவது; வாஜ்பாய் மற்றும் மோடி ஆகிய இருவரும் அவரவர் வழியில் பெரிய தலைவர்கள். ஆனால், வாஜ்பாயுடன் நான் 5.5 ஆண்டுகள் நெருங்கிப் பணியாற்றியுள்ளதால், அவரைப் பற்றிதான் எனக்கு அதிகம் தெரியும். என்னைப் பொறுத்தவரை, அவர் நேருவுக்கு அடுத்த பெரிய தலைவர்!

காஷ்மீர் விஷயத்தில் வாஜ்பாய் நிறைய அமைதி நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதில் சில நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்தாலும்கூட, அவரின் முயற்சிகளை காஷ்மீரிகள் பெரிதும் விரும்பினார்கள். நரேந்திரமோடி பதவிக்கு வந்ததும், வாஜ்பாயின் வழியைப் பின்பற்ற இன்னொரு பாரதீய ஜனதா தலைவர் வந்துவிட்டார் என்றே நினைத்தார்கள். ஆனால், மோடியின் வழி வேறானதாக இருக்கிறது.

வாஜ்பாய் மேற்கொண்ட அமைதி முயற்சிகளை, அவசியமானதென மோடி கருதவில்லை. தனது பதவியேற்பு விழாவிற்கு நவாஸ் ஷெரீஃபை அழைத்தது போன்ற நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டாலும், அந்த முயற்சிகள் போதுமானவையல்ல.

புலவாமா தாக்குதலைத் தொடர்ந்து, நடக்கும் விஷயங்கள் அனைத்தும் அரசியலாக்கப்படுகின்றன. ஏனெனில், இந்த நேரம் அப்படியானது. ஆனால், தேசியப் பாதுகாப்பு என்று வரும்போது, எதையும் நாம் அரசியலாக்கக்கூடாது.

நமது உளவு அமைப்புகளை, நாம் எப்போதும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்புடன் ஒப்பிட்டுக் கொள்கிறோம். ஆனால், அந்த அமைப்பிற்கு சுதந்திரம் அதிகம். ஆனால், தொழில்முறையில், நமது உளவு அமைப்புகள் அவர்களைவிட சிறந்தவை. இதை, அவர்களே ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.

யாசின் மாலிக் மற்றும் மீர்வெய்ஸ் போன்றோர் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதில்லை. கடந்த 2002ம் ஆண்டு தேர்தலில் சில பிரிவினைவாத தலைவர்கள் பங்கேற்றார்கள்.

2004ம் ஆண்டில், துணைப் பிரதமர் அத்வானி, அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஏன், அப்போதைய பிரதமரும்கூட அவர்களை சந்தித்துப் பேசினார். இவையெல்லாம்தான் காஷ்மீர் சிக்கலைத் தீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகள்.

ஆனால், தற்போது என்ன நடக்கிறது? வாஜ்பாய் யாருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தினாரோ, அவர்களெல்லாம் இப்போது சிறையில் இருக்கிறார்கள். ஃபரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மெஹ்பூபா மற்றும் காங்கிரஸ் ஆகியோரைத் தவிர. பின்னர் எப்படி முன்னேற்றம் ஏற்படும்? பேச்சுவார்த்தை ஒன்றுதான் சரியான பாதை.

ஆனால், காஷ்மீர் விஷயத்தில் தற்போது பின்பற்றப்படும் கடுமையான போக்கு, நிச்சயம் பலன் தராது. அது எங்கும் பலன் தந்ததுமில்லை” என்றார்.

– மதுரை மாயாண்டி