அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு மோடி கொடுத்த சிக்னல்….. மக்களவை தேர்தலில் வாக்குகளை அள்ள தந்திரம்..

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு மோடி கொடுத்த சிக்னல்…..

மக்களவை தேர்தலில் வாக்குகளை அள்ள தந்திரம்..

மத்திய பா.ஜ.க.அரசுக்கு நான்கு திசைகளில் இருந்தும் எதிர்ப்பு அலை கிளர்ந்து –சுனாமியாக உருவாகி வரும் சூழலில்-

வாக்குகளை அள்ள தனது கடைசி அஸ்திரத்தை ஏவி விட்டுள்ளது மோடி அரசு.

அந்த அஸ்திரம் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட புழக்கடை வழியாக அனுமதி வழங்கும் ராஜதந்திரம்.

பாபர்  மசூதி இடிக்கப்பட்டதை அடுத்து- 1993 ஆம் ஆண்டு-மத நல்லிணக்கதை பேணும் வகையில் –மசூதியை சுற்றி இருந்த 67 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியது மத்திய அரசு.

வழக்கு ஒன்றில் இந்த நிலம் தொடர்பாக தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம்-கையகப்படுத்தப்பட்ட நிலம் அதே நிலையில் தொடர வேண்டும் என்று  உத்தரவிட்டது. 26 ஆண்டுகளாக இந்த நிலை நீடிக்கும் சூழலில் – நேற்று திடீர் திருப்பமாக உச்சநீதிமன்றத்தில் 33 பக்கங்கள் கொண்ட மனுவை தாக்கல் செய்தது மத்திய அரசு.

அதில்,கையகப்படுத்தப்பட்ட நிலத்தை அதன் உரிமையாளர்களிடம் திருப்பி ஒப்படைக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

இந்த நிலத்தில் 42 ஏக்கர் நிலம் இந்து அறக்கட்டளைக்கு சொந்தமானது.ராமர் கோயில் கட்டுவதற்காக அந்த நிலத்தை அறக்கட்டளை வழங்கி  இருந்தது.

நிலம் திரும்ப ஒப்படைக்கப்படும் பட்சத்தில் ராமர் கோயில் கட்ட தடை ஏதும்  இருக்கப்போவதில்லை.

மத்திய அரசின் இந்த நடவடிக்கை மோடியின்  தேர்தல் கணக்கு என விமர்சிக்கப் படுகிறது.

கடந்த மக்களவை தேர்தலின் போது பா.ஜ.க. வைத்த பிரதான கோஷம்- ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயில் கட்டுவோம் என்பது தான்.

ஆனால் –கோயில் கட்டுவதற்கு சிறு துரும்பையும் கூட மோடி எடுத்துப்போட வில்லை என்ற குமுறல் ஆர்.எஸ்.எஸ்.உள்ளிட்ட இந்து அமைப்புகளிடம் உள்ளது.

அதனால் தான் அண்மையில் நடைபெற்ற மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் மாநில தேர்தல்களில் தோற்றதாக கருதும் பா.ஜ.க. மக்களவை தேர்தலிலும் அந்த நிலை தொடரக்கூடாது என அஞ்சியே   இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிகிறது.

மத்திய அரசின் நிலைப்பாட்டின் மீது உச்சநீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளே இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட நகர்வுகளை தீர்மானிக்கும்.

-பாப்பாங்குளம் பாரதி