மோடி பதவிஏற்பு விழாவில் கலந்துகொள்ள திமுக தலைவர் ஸ்டாலின், ரஜினி, கமலுக்கும் அழைப்பு

டில்லி:

மோடி பதவிஏற்பு விழாவில் கலந்துகொள்ள  உலக நாடுகளின் தலைவர்கள் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், தமிழகத்தில் அதிமுக பாஜக கூட்டணி தலைவர்கள் மற்றும்  திமுக தலைவர் ஸ்டாலின், ரஜினி, கமலுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா 303 இடங்களிலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து, மோடி தலைமையில் மீண்டும் பாஜக ஆட்சி அமைகிறது.

வருகிற 30-ந் தேதி (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் விழாவில் பிரதமராக மோடி பதவி ஏற்க இருப்பதாகவும், அவருடன் மந்திரிகளும் பதவி ஏற்பார்கள் என்றும் ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ள  பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக வங்காள விரிகுடா நாடுகளின் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு கூட்டமைப்பின் (பிம்ஸ்டெக்) தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டமைப்பில் வங்கதேசம், மியான்மர், இலங்கை, தாய்லாந்து, நேபாளம், பூடான் ஆகிய நாடுகள் உள்ளன. இது தவிர ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவராக இப்போதுள்ள கிர்கிஸ்தான், மோரீஷஸ் ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கு பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எனினும், மோடியின் பதவியேற்பு விழாவில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பங்கேற்க மாட்டார் என்று தெரிகிறது. ஏனெனில், 30-ஆம் தேதி அவர் 3 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

மேலும், பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அத்துடன் நாட்டின் எதிர்க்கட்சி தலைவர்கள், தமிழகத்தில் அதிமுக பாஜக கூட்டணி தலைவர்கள் மட்டுமல்லாது திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

பாஜக ஆளும் மாநில முதல்வர்கள், கட்சியின் மூத்த தலைவர்கள் தவிர தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், ஆந்திர முதல்வராக பதவியேற்க இருக்கும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்டோரும் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது.

நடிகர் ரஜினிகாந்த், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல் ஹாசன் ஆகியோருக்கு பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த பதவியேற்பு விழாவில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு மற்றும் ஆ.ராசா ஆகியோர் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கார்ட்டூன் கேலரி