மோடியால் திறந்துவைக்கப்பட்ட நெசவாளர்களுக்கான வணிக வளாகம் வீண்?

வாரணாசி: நெசவாளர்களுக்கு பயனளிக்கும் என்று கூறி, பிரதமர் நரேந்திர மோடி தனது தொகுதியான வாரணாசியில் திறந்த வணிக மையம், தற்போது உபயோகமின்றி காற்றாடுகிறது.

தீன் தயாள் ஹஸ்த்கலா சன்குல் என்ற பெயரில், மோடியால் கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி திறந்து வைக்கப்பட்ட பிரமாண்ட வணிக வளாகம், தற்போது பயன்கள் எதுவுமின்றி வீணாக காட்சியளிக்கிறது. இங்கே, வாடிக்கையாளர்களோ, நெசவாளர்களோ யாரும் வருவதில்லை.

இங்கே கடை வைத்த யாருக்கும் சொல்லிக் கொள்ளும்படி வியாபாரம் நடப்பதில்லை. எனவே, 78 கடைகள் வரை மூடப்பட்டுவிட்டன. திறந்து வைக்கப்பட்டிருக்கும் கடைகளும், வாடிக்கையாளர்கள் யாரும் வராமல், அங்கே வேலை செய்பவர்கள் தங்களின் பொழுதை எப்படி போக்குவது என்று தவித்து வருகிறார்கள்.

மேலும், அந்த வளாகத்தில் திறக்கப்பட்ட உணவகமும், ஆட்கள் யாரும் வராமல் பரிதாப நிலையில் இருக்கிறது. வாடகை தர இயலாமல், வேலை செய்யும் ஆட்களுக்கும் சம்பளம் தர முடியாமல் அல்லாடுகிறார் உணவக உரிமையாளர்.

அங்கிருக்கும் கடைகளின் உரிமையாளர்கள் பலபேர், தாங்கள் விரைவிலேயே காலி செய்ய உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

ஆனால், இந்த வணிக மையம் குறித்து அதிக செலவு செய்து, பெரியளவில் விளம்பரம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.