திர்பார்க்கப்பட்ட மாதிரியே பா.ஜ.க.வை,அ.தி.மு.க. தனது  கூட்டணி வண்டியில் ஏற்றிக் கொண்டது.10 பேருக்கு ‘சீட்’கேட்டது-பா.ஜ.க. ஏற்கனவே பலர் முன்பதிவு செய்து வைத்திருந்த தால்- 5 சீட்டுகளை மட்டுமே வழங்கியது-அ.தி.மு.க.

அந்த சீட்டுகளில் அமர ஆளாளுக்கு அடிதடி.கன்னியாகுமரி –கேட்காமலேயே பொன்.ராதா கிருஷ்ணனுக்கு ஒதுக்கப்பட்டது.அந்த ஏரியாவில் பெரிய செல்வாக்கு இல்லாத கட்சிகளை சுமந்து கொண்டு கடந்த தேர்தலில்  குமரியில் வென்றார்-பொன்.ராதா.

எண்ணை ஊற்றாமலேயே பொரிந்து தள்ளும் தமிழிசை சவுந்தரராஜனுக்கு –தூத்துக்குடி உறுதி செய்யப்பட்டுள்ளது.தி.மு.க.வில் அங்கு கனிமொழி நிற்பது’கன்பார்ம்’.நாடார் பெல்டில் இரு நாவுக்கரசிகளுக்கு இடையே போட்டி.

கோவை தொகுதி சி.பி.ராதா கிருஷ்ணனுக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது.அந்த தொகுதியில் அவர் இரு முறை எம்.பி.யாக இருந்துள்ளார்.அந்த தொகுதியை பெற மல்லுக்கு நின்றார்- வானதி சீனி வாசன்.’’சி.பி.ராதாகிருஷ்ணனை கோவை தொழில் அதிபர்கள் ஜெயிக்க வைத்து விடுவார்கள் ‘என்று கருதிய மேலிடம் சி.பி.ஆருக்கே கோவையை கொடுத்தது.

சிவகங்கை தொகுதியும் பா.ஜ.க.தலையில் கட்டப்பட்டது.கட்சி மேலிடமும் .அந்த தொகுதியை எச்.ராஜா தலையில் கட்ட- ‘நோ’ சொல்லி விட்டார் –மோடியின் தமிழ்நாட்டு மொழிப்பெயர்ப்பாளர்-ராஜா.

அங்கு நின்று அவர் இருமுறை தோற்று  விட்டார்.இந்த முறை வலிமையான கூட்டணியின்-வலிமையான வேட்பாளராக கார்த்தி சிதம்பரம் களம் காண்பது உறுதி.எனவே சிவகங்கைக்கு பதிலாக தென் சென்னை வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறார்-ராஜா.

‘’தென் சென்னை சிட்டிங் எம்.பி.யாக இருப்பவர் –அமைச்சர்  ஜெயக்குமாரின் மகன்.அந்த தொகுதியை விட்டுக்கொடுத்தால் நாங்கள் ஒருங்கிணைப்பாளர்களாக நீடிப்பது கடினம்’’ என்று சொல்லி விட்டார்கள் ஈபிஎஸ்சும், ஓபிஎஸ்சும்.

சிவகங்கை சீமையில் சிதம்பரம் மகனை எதிர்த்து களம் காண்பதை தவிர வேறு வழி இல்லை-ராஜாவுக்கு. பா.ஜ.க.வுக்கு மிச்சம் இருப்பது –ஒரே ஒரு தொகுதி.ஆனால் ஒரு டஜன் வேட்பாளர்கள் ‘ரேஸில்’ உள்ளனர்.கிருஷ்ணகிரி, திருச்சி, ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் ஏதாவது ஒன்று  பா.ஜ.க.வுக்கு கொடுக்கப்படும்.

கிருஷ்ணகிரி என்றால்- மாநில பா.ஜ.க. பொதுச்செயலாளர் நரேந்திரனுக்கு வழநங்கப்படும். ராமநாதபுரம் என்றால் நெல்லை பண்ணையாரும், முன்னாள் அமைச்சருமான நயினார் நாகேந்திரனுக்கு கிடைக்கும். கருப்பு முருகானந்தமும், பி.டி.அரசகுமாரும் திருச்சியை குறிவைத்துள்ளனர்.

‘மிஸ்டு கால்’ கொடுத்தும், நேரில் விண்ணப்பங்கள் வழங்கியும் பா.ஜ.க.வில் சேர்ந்த இளைஞர்களுக்கு எந்த தொகுதி?

கருணாநிதி பாணியில் சொல்ல வேண்டும் என்றால் –‘அவர்களுக்கு இதயத்தில் தான் இடம்’

—பாப்பாங்குளம் பாரதி