காந்திநகர்.

குஜராத்தில் நடைபெற்ற மகளிர் தின விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரை யாற்றினார். அப்போது பெண் ஒருவர் மோடிக்கு எதிராக கூச்சலிட்டார்.

இதன் காரணமாக கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து பாதுகாப்பு அதிகாரிகள் அந்த பெண்ணின் வாயை பொத்தி இழுத்துச்சென்று வெளியேற்றினர்.

பெண்கள் தின விழா அன்றே ஒரு பெண்ணை பேச விடாமல் தடுத்து, இழுத்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மகளிர் தினத்தை முன்னிட்டு குஜராத்தின் காந்தி நகரில் உள்ள கவுதம்புத்தா மந்திரில்  நடைபெற்ற விழாவில் பெண் பஞ்சாயத்து தலைவர்களை கவுரவித்து விருது வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக  கலந்துகொண்டு விருதுகளை வழங்கி உரையாற்றினார்.

அவர் பேசிக்கொண்டிருந்த போது,  மேடை அருகே  ஒரு பெண் திடீரென எழுந்து கூச்சலிட்டபடி மேடையை நோக்கிச் சென்றார்.

இதைக்கண்ட பாதுகாப்பு அதிகாரிகள் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி, வெளியே இழுத்துச் சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

போலீசார் அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில், அந்த பெண், உத்தர பிரதேசம் வோரா பகுதியை சேர்ந்தவர். அவரது பெயர் ஷாலினி சிங் எனவும், புத்தர் நகர் பஞ்சாயத்து தலைவர் எனவும் தெரியவந்தது. இவர் ஆம்ஆத்மி கட்சி உறுப்பினர் என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து ஷாலினி கூறியதாவது,

எம்.ஏ.பி.எட் பட்டதாரியான ஷாலினி, நான் தனிப்பட்ட முறையில் மாநில அரசாங்கத்துக்கோ, மத்திய அரசுக்கோ கோரிக்கை விடுக்கவில்லை. எனது பகுதி வளர்ச்சி பெறுவதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக போராடி வருகிறேன். என்றார்.

தனக்கு எந்த உதவியும் செய்யாமல்  மாநில அரசு புறக்கணிக்கிறது என்பதை,  தான் பிரதமரிடம் தெரிவிக்க விரும்பியே வந்ததாக ஷாலினி கூறினார்.

சர்வதேச பெண்கள் தின விழா அன்றே ஒரு  பெண்ணை பேச விடாமல் இழுத்து சென்று அவமரியாதை செய்த செயல் உலக  பெண்களிடையே மோடி மீது கடும் அதிருப்தியை உருவாக்கி உள்ளது.