மோடியின் ராமர் கோவில் பேச்சு விரக்தியின் வெளிப்பாடு : சச்சின் பைலட்

டில்லி

பிரதமர் மோடியின் ராமர் கோவில் பற்றிய பேச்சுக்கள் அவருடைய விரக்தியை வெளிக்காட்டுகிறது என காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் கூறி உள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்து வருகிறது. காங்கிரஸ் மற்றும் பாஜக இரு கட்சிகளும் மும்முரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பிரசாரப் பயணத்தில் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் உடன் செல்கிறார்.
நேற்று ஒரு செய்தி தொலைக்காட்சிக்கு சச்சின் பைலட் அளித்துள்ள பேட்டியில், “ராமர் கோவில் போன்ற மத சம்பந்தமான விவகாரங்களை பிரதமர் பேசுவதின் மூலம் பாஜகவின் நம்பிக்கை இன்மை தெரிய வந்துள்ளது. அவர் முந்தைய தேர்தலின் போது நல்ல அரசாட்சி, விவசாயிகள் வருமானத்தை பெருக்குதல், வேலைவாய்ப்பு, உள்ளிட்ட பலவற்றை குறித்தும் பேசினார். ஆனால் அவை அனைத்தும் தற்போது தோல்வி அடைந்துள்ளன.

தற்போதுள்ள நிலையில் மாநிலத்திலும் மத்தியிலும் ஒரு நல்ல அரசாட்சி தேவை. இதை மகள் உணர்ந்துள்ளனர். ஒரு அரசின் வேலை கோவில், தேவாலம், குருத்வாராக்களை கட்டுவது இல்லை. அதை நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும். இந்த தேர்தலின் முக்கிய அம்சங்களை காங்கிரஸ் அறிந்துள்ளது. எனவே அதை குறித்து மட்டுமே காங்கிரஸ் பேசி வருகிறது.

கடந்த ஐந்து வருட ஆட்சியில் பாஜக எந்த ஒரு சாதனையும் செய்யவில்லை. இதனால் பிரதமர் மோடியே விரக்தி அடைந்துள்ளார். அவர் கோவிலைப் பற்றி பேசுவது அந்த விரக்தியின் வெளிப்பாடு ஆகும். மத்தியப் பிரதேசம், சத்திஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் மட்டுமின்றி மத்தியிலும் பாஜக அரசு கடுமையாக தோல்வி அடைந்துள்ளது. அந்த தோல்வி தேர்தலிலும் எதிரொலிக்காமல் இருக்க பிரதமர் மதம் மற்றும் கோவில் பற்றி பேசி வருகிறார்” என தெரிவித்துள்ளார்.