டில்லி

ரான் நாட்டின் சாபகார் ரயில்வே ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா விலக்கப்பட்டதற்கு இந்திய நிதி அமைசகமே காரணம் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கூறி உள்ளார்

அமெரிக்காவின் மிரட்டலுக்கு இணங்க இந்தியா தனது ஈரான் எண்ணெய் வர்த்தகத்தைக் குறைத்துக் கொண்டுள்ளது.   இது ஈரானுக்கு மிகவும் மனவருத்தத்தை அளித்துள்ளது.  அத்துடன் சீனாவுடன் ஈரானுக்குச் சமீபகாலமாக நெருக்கம் அதிகரித்து வருகிறது.   சீனாவுடன் இன்னும் 25 வருடங்களுக்கான ஒப்பந்தங்களை ஈரான் கையெழுத்திட்டுள்ளது

இந்தியா ஈரான் நாடுகளுக்கிடையே சாபகார் துறைமுக ரயில்வே அமைப்புக்கான ஒப்பந்தம் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கையெழுத்திடப்பட்டது.  இந்தியத் தரப்பில் இருந்து பணிகளைத் தொடங்கவில்லை.   இதற்கு நிதிப்பற்றாக்குறை காரணம் என இந்தியத் தரப்பில் கூறப்பட்டாலும் அமெரிக்கா மீதான அச்சமே காரணம் என ஈரான் நினைத்தது.

இந்நிலையில் இந்திய அரசு பணிகளைத் தொடங்காததைக் காரணம் காட்டி நேற்று ஈரான் அரசு இந்தியாவை ஒப்பந்தத்தில் இருந்து நீக்கி உள்ளது.  இது இந்தியா மற்றும் ஈரான் இடையேயான வர்த்தக உறவு சரிந்து வருவதைக் காட்டுவதாகக் கூறப்படுகிறது.    பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமி, இது குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில் சுப்ரமணியன் சுவாமி, “ஈரான் நாடு தனது நட்பை மாற்றிக் கொண்டு சீனாவுடன் கூட்டுச் சேருவது நமது வெளிநாட்டுக் கொள்கைக்கு எதிர்மறையான விளைவுகளை அளிக்கும். மத்திய நிதி அமைச்சகம் கஞ்சத்தனமாகத் திட்டத்துக்கு தேவையான ஒதுக்கீடு அளிக்காததால் சாபர்கர் துறைமுக ரயில்வே திட்டத்தை நேரத்தில் ஒப்பந்தப்படி முடிக்காமல் போனதே இதற்கு முக்கிய காரணம்” எனப் பதிவில் தெரிவித்துள்ளார்.