மாலத்தீவு : மாபெரும் வெற்றி பெற்ற முன்னாள் அதிபர் முகமது நஷீத் கட்சி 

மாலே

மாலத்தீவில் நடைபெற்ற தேர்தலில் முன்னாள் அதிபர் முகமது நஷீத் தின் கட்சி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

மாலத்தீவு என்பது இந்திய பெருங்கடலில் உள்ள பல சிறிய தீவுகளைக் கொண்ட நாடு ஆகும்.   அந்நாட்டில் வெகுநாட்களாக ராணுவ ஆட்சி நடந்தது.    கடந்த 2008 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் எம் டி பி என அழைக்கப்படும் மாலத்தீவு ஜனநாயக கட்சி வென்றது.   அக்கட்சியின் தலைவர் முகமது நஷீத்  அதிபராக பொறுப்பேற்றார்.

மீண்டும் ராணுவ நெருக்கடி மற்றும் பொதுமக்கள் போராட்டம் ஆரம்பித்தது.   அதனால் 2012 ஆம் ஆண்டு முகமது நஷீத் அதிபர் பதவியை ராஜினாமா செய்தார்.   கடந்த  2013 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிபராக முற்போக்கு கட்சியின் தலைவர் அப்துல்லா யாமீன் வெற்றி பெற்றார்.   அதன் பிறகு முகமது நஷீத் மீது எழுந்த பயங்கரவாத தொடர்பு புகாரில் அவர் நாட்டை விட்டு 2016 ஆம் ஆண்டு வெளியேற்றப் பட்டார்.

கடந்த ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் எம்டிபி கட்சியின் துணைத் தலைவர் முகமது சோலி அப்போதைய அதிபரான அப்துல்லா யாமீனை தோற்கடித்தார்.   முகமது நஷீத் நாடு திரும்பினார்.   நேற்று முன் தினம் மாலத்தீவு நாடாளுமன்ற தேர்தல் நடந்தது.    இதில் உள்ள 87 இடங்களுக்கு முகமது நஷீத் கட்சியான எம்டிபி கட்சிக்கும் மற்றும் அப்துல்லா யாமினின் முற்போக்கு கட்சிக்கும் போட்டி இருந்தது.

இந்த தேர்தலில் முகமது நஷீத் கட்சியான எம்டிபி கட்சி 60 இடங்களில் வெற்றி பெற்று அறுதி பெரும்பான்மை பெற்றுள்ளது.  ஒரு சில மாலத்தீவு ஊடகங்கள் எம்டிபி கட்சி 68 இடங்களை வென்றுள்ளதாக கூறி வருகின்றன.   யாமீனின் கட்சிக்கு 7 இடங்களும் மற்றவை சுயேச்சைகளுக்கும் கிடைத்துள்ளன.  சுயேச்சைகள் தங்கள் ஆதரவை எம்டிபி கட்சிக்கு அளிப்பார்கள் என எதிர்பார்க்க படுகிறது.

இது குறித்து முகமது நஷீத், “இந்த வெற்றியால் மக்களிடம் எங்களுக்கு உள்ள ஆதரவு நிரூபிக்கப்பட்டுள்ளது.  நாங்கள் இனி வலுவான நிரந்தரமான குடியரசு ஆட்சியை அமைத்து பாராளுமன்ற நடைமுறைகளை ஆதரிப்போம்.   இந்த பகுதியிலும் எங்கள் அரசிலும் அமைதி நிலவ ஆவன செய்வோம்.” என தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published.