ஒருநாள் தொடர், டி-20 தொடர் மற்றும் முதல் டெஸ்ட் போட்டி என்று தான் வாய்ப்புப் பெற்ற எதிலுமே உருப்படியாக செயல்படாத முகமது ஷமி, ஒருவழியாக காயமடைந்து முதல் டெஸ்ட் போட்டியுடன் வெளியேறினார்.

அவரின் இடத்திற்கு கொண்டுவரப்பட்டார் முகமது சிராஜ். ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணி வந்துசேர்ந்த சிறிது நாட்களிலேயே, ஐதராபாத்தில் சிராஜின் தந்தை மரணமடைய, நாட்டுக்கு திரும்பலாம் என்ற அனுமதியையும் வழங்கியது பிசிசிஐ.

ஆனால், தேசிய அணிக்கு விளையாடக்கூடிய அரிதிலும் அரிதான வாய்ப்பு கிடைத்துள்ளது என்பதை நன்கு உணர்ந்தவராக இருந்தார் சிராஜின் தாயார். கேப்டன் கோலியும் நாடு திரும்ப வேண்டாமென சிராஜிடம் கூறியதாக தகவல்.

எனவே, ஆஸ்திரேலியாவிலேயே தொடர்ந்து தங்கியிருந்தார் சிராஜ். ஆனாலும், டி-20 மற்றும் ஒருநாள் என்று எதிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. முதல் டெஸ்ட் போட்டியிலும் ‘நோ’. அதன்பிறகுதான், அணிக்கு உதவாத ஷமிக்கு ஏற்பட்ட காயம், சிராஜுக்கு உதவியது.

இரண்டாவது டெஸ்ட்டில் வாய்ப்பு பெற்ற இவர், மொத்தமாக இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி, அணியின் வெற்றியில் முக்கியப் பங்கினை ஆற்றி, தான் நாடு திரும்பாமல் இருந்தது மற்றும் தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பு என்று சேர்த்து, மொத்தமாக நியாயம் செய்துள்ளார்! இவருக்கான வாய்ப்புகள் அடுத்தடுத்து வழங்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் இன்னிங்ஸில் 15 ஓவர்கள் வீசி, 4 மெயிடன்கள், 40 ரன்களுடன் 2 விக்கெட்டுகள் சாய்த்த அவர், இரண்டாவது இன்னிங்ஸில் 21.3 ஓவர்களை வீசி, 4 மெயிடன்களுடன் 37 ரன்களைக் கொடுத்து, 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரண்டு இன்னிங்ஸ்களிலும் அவர் பேட்டிங்கில் பங்களிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

மேலும், காயமடைந்து, இரண்டாவது டெஸ்ட் போட்டியுடன் வெளியேறியுள்ள உமேஷ் யாதவிற்கு பதிலாக, தமிழக வேகப் பந்துவீச்சாளர் நடராஜன் அணிக்குள் எடுக்கப்படுவார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.