மும்பை: ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் கண்டுபிடிக்கப்பட்ட சிறந்த வீரர் முகமது சிராஜ் என்று புகழாரம் சூட்டியுள்ளார் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.

இந்திய அணியில், டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகளை(13) சாய்த்த பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் முகமது சிராஜ். இவர் மொத்தம் 3 போட்டிகளில் (6 இன்னிங்ஸ்) மட்டுமே விளையாடினார். முகமது ஷமிக்கு ஏற்பட்ட காயம் காரணமாக இவர் அணியில் சேர்க்கப்பட்டார்.

ஆஸ்திரேலியாவில் இருந்தபோதே தனது தந்தையை இழந்த சிராஜ், அதற்காக நாடு திரும்பவில்லை. மேலும், சில ஆஸ்திரேலிய ரசிகர்களின் இனவெறி வசைபாடல்களுக்கும் ஆளானார். ஆனாலும், மனந்தளராமல் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்களித்தார்.

இதனையடுத்து சிராஜ் குறித்து கருத்து தெரிவித்துள்ள ரவி சாஸ்திரி, “ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில், பந்துவீசும் விதம் மற்றும் மனவலிமை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு, ஒரு சிறந்த வீரரை கண்டுபிடித்துள்ளோம். அவரது பெயர் முகமது சிராஜ்” என்றுள்ளார்.