சிட்னி :

ஸ்திரேலிய ‘ஏ’ அணியுடன் நேற்று சிட்னி மைதானத்தில் நடந்த இரண்டாவது பயிற்சியாட்டத்தில் விளையாடிய இந்திய அணி பேட்ஸ்மேன் பும்ரா, ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் கேமரூன் க்ரீன் வீசிய பந்தை நேராக தூக்கி அடித்ததில், வேகமாக வந்த பந்து, பந்துவீச்சாளர் க்ரீனின் தலையில் பலமாக தாக்கியது.

இதனால் நிலைகுலைந்து கீழே விழுந்த க்ரீனை, மறுமுனையில் நின்றிருந்த இந்திய அணி வீரர் முகமத் சிராஜ் கண்ணிமைக்கும் நேரத்தில் தனது பேட்டை கிரீஸில் போட்டுவிட்டு, க்ரீனை நோக்கி ஓடினார்.

போட்டி நடுவரும் மற்றவர்களும் கூட சிராஜ் ஓடிச்செல்வதை பார்த்த பின் தான் சுதாரித்தனர், சக போட்டியாளர் ஒருவருக்கு காயம் பட்டதை பார்த்து பதறிப்போய் ஓடிய சிராஜின் இந்த மனிதாபிமான செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது, சமூக வலைத்தளத்திலும் வைரலானது.

பின்னர் மருத்துவர்கள் வந்து பார்த்தபோதும், காயம்பட்ட க்ரீன் தொடர்ந்து விளையாட முடியாமல், மைதானத்தை விட்டு வெளியேறினார்.

முதல் முறையாக இந்திய டெஸ்ட் அணியில் விளையாட இருக்கும் முகமத் சிராஜ், இந்திய அணியுடன் ஆஸ்திரேலியா சென்று இறங்கியதும் நவம்பர் 20 ம் தேதி, தனது தந்தையை பறிகொடுத்தார், இந்தியா திரும்ப பி.சி.சி.ஐ. அனுமதியளித்த போதும், தன் தந்தையின் கனவை நிறைவேற்ற தான் இந்திய அணிக்காக விளையாடப்போவதாக தெரிவித்தார்.

ஏற்கெனவே 2018 – 19 ம் ஆண்டுகளில் ஒரு நாள் மற்றும் டி-20 போட்டிகளில் விளையாட தேர்வானவர் முகமத் சிராஜ், அப்போது அவர் பெரிதாக பேசப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நவம்பர் 10 ம் தேதி ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி, 14 நான்கு நாட்கள் கொரோனா தனிமைக்கு பிறகு, ஆஸ்திரேலிய அணியுடன் விளையாடி வருகிறது. அடுத்து, 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில், இந்திய கிரிக்கெட் அணி விளையாட இருக்கிறது, முதல் போட்டி டிசம்பர் 17 ம் தேதி அடிலெய்டு மைதானத்தில் நடைபெறுகிறது.