வுகாத்தி

ந்தியா என்பது இந்துக்களின் நாடு என ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் கூறி உள்ளார்.

அசாம் மாநில தலைநகரான கவுகாத்தியில் நேற்று ஆர் எஸ் எஸ் சார்பில் மாபெரும் கூட்டம் ஒன்று நடைபெற்றது.   கனபரா மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சுமார் 50000 பேருக்கு மேல் கலந்துக் கொண்டனர்.   இந்த கூட்டத்தில் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்துக் கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

மோகன் பகவத் தனது உரையில் “இந்தியா சுதந்திரம் அடைந்த போது தனி நாடு வேண்டும் என எழுந்த போராட்டத்தினால் பாகிஸ்தான் உருவானது.    இந்தியர்கள் பாகிஸ்தானுடனான பகை உணர்வை அத்துடன் மறந்து விட்டனர்.   ஆனால் பாகிஸ்தானியர்கள் இன்னும் அந்த பகை உணர்வை மறக்காமல் இருக்கின்றார்கள்.   அதுதான் இந்துக்களுக்கும், மற்றவர்களுக்கும் உள்ள வேறுபாடு.   இந்தியா ஒரு இந்து தேசம்.    அதை ஒப்புக்கொள்ள மனமில்லாததால் இந்தியாவை பாக் எதிரியாக நினைக்கிறது.

மொகஞ்சோதாரா, ஹரப்பா ஆகியவை பண்டைய இந்துக்களின் நாகரிகத்தை பறைசாற்றும் இடங்கள் ஆகும்.    ஆனால் அவை இப்போது பாகிஸ்தானின் பகுதிகள் ஆகி விட்டது.    அதனால் தான் நமது பண்டைய இந்துத்வா கலாச்சாரத்தை நம்மால் உலகுக்கு எடுத்துக் காட்ட இயலவில்லை.    இந்துத்வா என்பது பல மொழிகள், கலாசாரங்கள், மதங்களை கடந்த ஒரு ஏக இந்தியா ஆகும்.  இந்துத்வா வேற்றுமையில் ஒற்றுமையக் காண்கிறது.   அதனால் தான் இந்தியாவை ஒரு இந்து தேசம் என கூறுகிறோம்.

வங்கதேச மக்கள் இந்தியாவில் உள்ள வங்க மொழியை பேசினாலும் அவர்கள்  தனி நாடாக இருப்பதற்கு என்ன காரணம் தெரியுமா?  அவர்கள் இந்துத்வாவை ஒப்புக் கொள்ள தயங்குவதாலும்,  இந்தியா ஒரு இந்து தேசம் என்பதாலும் தான்.”  எனக் கூறி உள்ளார்.  வார்த்தைக்கு வார்த்தை  இந்தியா என்பது இந்து தேசம் என்பதை மோகன் பகவத் குறிப்பிட்டுள்ளார்.