திருவனந்தபுரம்:

கேரளாவின், பாலக்காட்டில், குடியரசு தினத்தையொட்டி ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு நடத்தும் பள்ளியில் நாளை நடக்கும் நிகழ்ச்சியில் ஆர் எஸ் எஸ் தலைவர்  மோகன் பாகவத் தேசியக் கொடியை ஏற்றுகிறார்.

கேரள அரசு நாளை நடக்கும் குடியரசு தின விழாவில், தேசியக் கொடியை பயன்படுத்துவது குறித்த அறிவுரைகளை  பிறப்பித்துள்ளது.

அந்த அறிவுரையில் அரசு அலுவலகங்கள், கல்லுாரி, பள்ளிகளில் அதிகாரிகள், கல்லுாரி முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள் மட்டுமே, தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என, குறிப்பிடப்பட்டுள்ளது.  அதே நேரத்தில் பாலக்காடு மாவட்டத்தில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் துணை அமைப்பான, வித்யாபாரதி நடத்தும் பள்ளியில், ஆர்.எஸ்.எஸ்., தலைவர், மோகன் பாகவத், தேசியக் கொடியை ஏற்றுவார் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்ற ஆண்டு ஆக., 15ல், சுதந்திர தினத்தையொட்டி, இந்தப் பள்ளியில், மோகன் பாகவத், தேசியக் கொடியை ஏற்றினார். அப்போது அரசு விதிகள் மீறப்பட்டதாக புகார் எழுந்ததால் சர்ச்சையானது.   ஆர் எஸ் எஸ் சார்பில் ‘அரசு உத்தரவு, அரசு பள்ளிகளுக்கு மட்டுமே பொருந்தும்; தனியார் பள்ளிகளுக்கு அது பொருந்தாது’ என, தெரிவிக்கப்பட்டது.

தற்போது தேசியக் கொடி ஏற்றுவது தொடர்பாக, அரசு அனைத்துப் பள்ளிகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், பாலக்காட்டில் தேசியக் கொடியை ஏற்றப் போவதாக, ஆர்.எஸ்.எஸ்., கூறியுள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.