அரசு திரைப்பட விருது விழாவில் நிச்சயம் பங்கேற்பு : மோகன்லால் உறுதி

திருவனந்தபுரம்

கேரள அரசின் திரைப்பட விருது வழங்கும் விழாவில் தாம் நிச்சயம் பங்கேற்க உள்ளதாக நடிகர் மோகன்லால் கூறிஉள்ளார்

கேரள அரசு திரைப்பட விருது வழங்கும் விழா வரும் ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி அன்று கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது.    இதற்கு நடிகர் மோகன்லாலை சிறப்பு விருந்தினராக அழைக்க கேரள அரசு முடிவு எடுத்தது.   இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

அம்மா சங்கத்தில் இருந்து விலகிய நடிகைகளான கீது மோகன்தாஸ். ரீமா கலிங்கல், இயக்குனர் ராஜிவ் ரவி,  நடிகர் பிரகாஷ் ராஜ் ஆகியோர் இதை எதிர்த்தனர்.   இவர்கள் சார்பில் மோகன்லாலை இந்த விழாவுக்கு அழைக்கக் கூடாது என  107 பேர் கையெழுத்திட்ட மனு ஒன்று கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு அளிக்கப்பட்டது.

இதனால் கேரள திரை உலகில் கடும் விவாதம் ஏற்பட்டது.  நேற்று கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் கேரள அரசின் கலாசாரத்துறை அமைச்சர் ஆகியோர் நடிகர் மோகன்லாலுடன் தொலைபேசியில் பேசி உள்ளனர்.    அந்த சமயத்தில்  கேரள அரசின் திரைப்பட விருது வழங்கும் விழாவில் தாம் கண்டிப்பாக கலந்துக் கொள்வதாக நடிகர் மோகன்லால் உறுதி அளித்துள்ளார்.