தனது படங்களை முதன் முறையாய் பார்க்கும் மோகன்லால்

” நீண்ட நாட்களாக ஊரடங்கு அமலில் உள்ளதால் மலையாள திரைப்பட உலகம் 600 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டத்தைச் சந்தித்துள்ளது’’ என்று பிரபல மலையாள இயக்குநர் பி. உன்னிகிருஷ்ணன் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

‘’ கேரளாவில் பைனான்சியர்களிடம் கடன் வாங்கித்தான் பெரும்பாலான படங்கள் தயாரிக்கப்படுகின்றன’’ என்று பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ள அவர், ‘’  எப்போதும் இல்லாத வகையில் இப்போது நிலவும் நெருக்கடியால், படம் தயாரிப்பதற்கு வாங்கிய தொகையைப் பல தயாரிப்பாளர்கள் வட்டியாகவே செலுத்தியுள்ளனர்’’ என்று குறிப்பிட்டார்.

’’ 40 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கும் மம்மூட்டியும், மோகன்லாலும் இவ்வளவு நீண்ட நாட்கள் படப்பிடிப்பு இல்லாமல் சும்மா இருந்தது கிடையாது’’ என்று அவர் கூறினார்.

‘’ மோகன்லாலுடன் நான் அடிக்கடி தொடர்பில் இருக்கிறேன்.. அவர், தான் நடித்து ’சூப்பர் ஹிட்’ டான, படங்களை இப்போது தான் முதன் முறையாகப்  பார்த்துக் கொண்டிருக்கிறார்’’ என்று வியப்பூட்டும்  தகவலைப் பகிர்ந்து கொண்டார், இயக்குநர் உன்னி கிருஷ்ணன்.

படப்பிடிப்புக்காக ஜோர்டான் சென்றுள்ள பிரித்விராஜ் மற்றும் இயக்குநர் பிளெஸ்சி ஆகிய இருவருடனும் தான் அடிக்கடி பேசி வருவதாகக் குறிப்பிட்ட உன்னிகிருஷ்ணன், ‘முழு படப்பிடிப்பையும் முடித்து விட்டுத்தான் அவர்கள் நாடு திரும்புவார்கள்’’ என்று புதிய தகவலைத் தெரிவித்தார்.

– ஏழுமலை வெங்கடேசன்