#MeToo உள்நோக்கம் கொண்டது; அது ஒரு ஃபேஷனாகி விட்டது – மோகன்லால் கருத்து

கேரளா:

பாலியல் துன்புறுத்தல் குறித்து தெரிவிக்கப்படும் ‘Me Too’ புகார்கள் உள்நோக்கம் கொண்டவையாக உள்ளது என மலையாள நடிகர் மோகன்லால் கருத்து தெரிவித்துள்ளார்.

பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்களை சந்திக்கும் பெண்கள், அதுகுறித்த தங்களது புகார்களை ’மீ டூ’ ஹேஷ்டேக் மூலம் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். திரைத்துறை சார்ந்த பெண்கள், இதுதொடர்பாக அதிக புகார்களை எழுப்பியுள்ளனர்.

கேரளாவில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் #MeToo குறித்து நடிகர் மோகன்லாலிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது அவர், “மலையாள சினிமா உலகில் இதுபோன்ற பிரச்சனைகள் பெரிதாக ஒன்றும் இல்லை. மீடூவை ஒரு இயக்கமாக கருதமுடியாது. அது உள்நோக்கம் கொண்டது. அது ஒரு ஃபேஷனாக மாறிவிட்டது. புதிதாக வரும் எந்த விஷயமும் சிறிது காலங்களே இருக்கும். இதுபோன்ற சர்ச்சைகள் திரைப்படங்களில் மட்டும் அல்ல, வாழ்க்கையில் எல்லா இடங்களிலும் நடக்கலாம்,” என்று கூறியுள்ளார்.

இருப்பினும், மோகன்லால் கூறுவதுபோல் இது எளிதில் மறையக்கூடிய விஷயமாக கருதப்படவில்லை. ஹாலிவுட்டில் தொடங்கி தமிழ் சினிமா வரை இந்த தாக்கம் இருந்து வருகிறது. சமீபத்தில், தமிழ் திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்து மீது பாடகி சின்மயி கூறிய பாலியல் புகார்கள் இன்னும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

முன்னதாக, பிரபல நடிகையை கடத்தி பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக மலையாள திரைப்பட நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு, பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவருக்கு ஆதரவாக இருந்ததாக, மலையாள திரைப்பட நடிகர் சங்க தலைவர் மோகன்லால் மீதும் விமர்சனம் எழுந்தது.

உருவான இரண்டு மாதங்களிலேயே திரைத்துறையினரையும், பத்திரிகை வட்டாரங்களையும் தாக்கிய இந்த மீடூ அலை, பல உயர்மட்ட பதவிகளில் இருக்கும் ஆண்களை பதவி விலக வைத்தது குறிப்பிடத்தக்கது. இதில், மத்திய அமைச்சரான எம்.ஜெ. அக்பர், ஹைதராபாத்தில் டைம்ஸ் ஆப் இந்தியாவின் ஆசிரியர் கே.ஆர். ஸ்ரீனிவாஸ், கேரளாவில் தி இந்து பத்திரிக்கையின் ஆசிரியர் கௌரிதாசன் நாயர் மற்றும் இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கையின் அரசியல் ஆசிரியர் மற்றும் bureau chief பிரசாந்த் ஜா ஆகியோர் அடங்குவர்.