திருவனந்தபுரம்:

பிரபல மலையாள நடிகர் மோகன்லால் பாஜக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட அவரது ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த உள்ளனர்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில்  பேசிய பா.ஜ.க. எம்.எல்.ஏ ஓ ராஜகோபால், நடிகர் மோகன்லால் பாஜக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் களமிறக்கப்படுவார் என கூறியதை தொடர்ந்து, அவரது ரசிகர்கள் கடும் எதிர்த்து தெரிவித்து உள்ளனர்.

கடந்த ஆண்டு மோடியை சந்தித்த மோகன்லால்

தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ள மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால்.  இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது இருவரும் சுமார் 1 மணி நேரம் பேசியதாக கூறப்பட்டது.

அப்போது, கேரளாவின் வயநாட்டில் சர்வதேச மலையாளி வட்டமேஜை அமைப்பின் விழாவுக்கு அழைப்பு விடுப்பதற்காகவே மோகன்லால் சந்தித்ததாக கூறப்பட்டது.

ஆனால், அரசியல் விமர்சகர்கள், மோகன்லால்  பாஜகவில் சேர்வதற்கான அறிகுறி என்று கூறி வந்தனர்.  ஆனால் இதுபற்றி அவர் எதுவும் சொல்லவில்லை.

இந்நிலையில், வரும் பாராளுமன்ற தேர்தலில் அவரை திருவனந்தபுரம் தொகுதி யில் பாஜக சார்பில் போட்டியிட வைக்க, ஆர்எஸ்எஸ் முடிவு செய்து இருப்பதாக வும்,  இது தொடர்பாக ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும்  தகவல் வெளியானது.

இந்த நிலையில், சமீபத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ ஓ ராஜகோபால், மோகன்லாலை மக்களவைத் தேர்தலில் போட்டியிட பா.ஜ.க. வலியுறுத்தும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், மோகன்லால் ரசிகர்கள் அவர், மக்களவை தேர்தலில்  போட்டியிடக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.