தெலுங்கான மாநில காங்கிரஸ் செயல்தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீன் நியமனம்!

ஐதராபாத்:

தெலுங்கானா மாநில சட்டமன்றத்துக்கு டிசம்பர் 7ந்தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரரான முகமது அசாருதீனை காங்கிரஸ் பொதுச்செயலாளர் அசோக் கெலாட் நியமனம் செய்துள்ளார்.

தெலங்கானா மாநிலத்தில் தெலுங்கான ராஷ்டிரிய சமிதி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு ஆட்சி அமைக்க காங்கிரஸ் தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், தெலுங்கானா காங்கிரஸ் கட்சிக்கு செயல்தலைவராக அசாருதீனை அகில இந்திய காங்கிரஸ் கட்சி நியமித்து உள்ளது. மேலும் கட்சியின்  துணைத் தலைவர்களாக பி.எம்.வினோத் குமார் மற்றும் ஜாஃபர் ஜவேத் ஆகியோர் உள்பட 8 பேரை ஜெனரல் செகரட்டரி களாகவும், 4 பேரை செகரட்டரிகளாகவும்  நியமனம் செய்துள்ளனர்.

ஏற்கனவே காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றி வரும் அசாருதீன்,  கடந்த 2009ம் ஆண்டு  உத்தரப்பிரதேசத்தின் மொராதாபாத் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்து குறிப்பிடத்தக்கது.

தேர்தலுக்கு ஒரு வாரமே இருக்கும் நிலையில், மாநில காங்கிரஸ் கட்சியின் செயல்தலைவராக அசாருதீன் நியமிக்கப்பட்டிருப்பது காங்கிரஸ் தொண்டர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.