கல்கி சாமியாரின் குடும்பத்திடம் இருந்து கட்டுகட்டாக பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கல்கி ஆசிரமத்தில் நேற்று முதல் ஐ.டி ரெய்டு நடந்துவருகிறது. ரெய்டு தொடர்பாக வெளிவரும் தகவல்கள் தமிழகம் மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த ஆன்மிக மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. தன்னைத் தானே `விஷ்ணுவின் அவதாரம்’ எனக் கூறிக்கொண்டு ஆன்மிகப் பணிகளைச் செய்துவந்த கல்கி பகவான் குறித்த தகவல் ஒவ்வொன்றும் அதிர்ச்சி ரகம். அவரின் வளர்ச்சி, ஆசிரம செயல்பாடுகள் அனைத்தும் சர்ச்சைகள் நிறைந்ததாகவே உள்ளன. இதற்கிடையே, நேற்று முன்தினம் முதல் நடந்துவரும் ரெய்டில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்கி பகவானின் மகன் கிருஷ்ணா நடத்திவரும் நிறுவனத்தில் மட்டும் 24 கோடி ரூபாய் இந்தியப் பணமும், 9 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவை அனைத்தும் கணக்கில் காட்டாத வருமானம் எனக் கூறப்படுகிறது. மேலும், கிருஷ்ணா நடத்திவரும் கோல்டன் லோட்டஸ், ட்ரீம் வியூ, ப்ளூ வாட்டர் கட்டுமான நிறுவனங்கள் பெயரில் தமிழகத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் வாங்கப்பட்டதாகவும், இந்த நிலத்துக்கான மூலதனம் எங்கிருந்துவந்தது என்பதுகுறித்த விசாரணையை நுங்கம்பாக்கத்தில் வைத்தே கிருஷ்ணாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரித்துவருகின்றனர். தமிழகத்தைப் போலவே கென்யா போன்ற ஆப்பிரிக்கா நாடுகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் வாங்கியதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக வருமான வரித்துறை சார்பில் தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், மூன்று நாள்களாக நடந்த ரெய்டின் முடிவில் வருமான வரித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், மொத்தமாக ரூ.500 கோடி கணக்கில் காட்டப்படாத வருமானம் இந்தச் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 43.9 கோடி ரூபாய் இந்தியப் பணமும், 18 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், 26 கோடி மதிப்பிலான 88 கிலோ நகைகளும், 5 கோடி மதிப்புள்ள வைர நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்கி சாமியார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான இடங்களில் இருந்து பல கோடி கணக்கில் பணமும், நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளது உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.