சென்னை,

திமுக எம்எல்ஏக்களுக்கு பணப்பட்டுவாடா குறித்து,  சிபிஐ விசாரிக்க கோரும் மனுவில், முதல்வர் பழனிச்சாமி பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், இந்த விவகதாரத்தை சிபிஐ விசாரிக்க முடியாது என்று கூறி உள்ளார்.

ஜெ.மறைவை தொடர்ந்து அதிமுக இரண்டாக பிளவுபட்டது. அதைத்தொடர்ந்து சசிகலா ஆதரவு எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவி ஏற்றார். அதைத்தொடர்ந்து கவர்னர் உத்தரவுபடி சட்டசபையில் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டது.

இந்நிலையில், எடப்பாடி தலைமையிலான அரசுக்கு ஆதரவு அளிக்க அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் கூவத்தூர் சொகுசு விடுதிக்கு கடத்திச்செல்லப்பட்டு, அவர்களிடம் பேரம் பேசப்பட்டது.

இதுகுறித்த வீடியோ சமீபத்தில் ஆங்கில தொலைக்காட்சியில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதுகுறித்து பதில் மனுதாக்கல் செய்ய முதல்வர் மற்றும் சட்டமன்ற செயலாளருக்கு கோர்ட்டு உத்தரவிட்டி ருந்தது.

அதையடுத்து, வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சார்பில் ஐகோர்ட்டில்  பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற விவகாரத்தினை சிபிஐ மற்றும் வருவாய் புலனாய்வு துறையினர்  விசாரிக்க முடியாது என்றும், இது சட்டப்பேரவை உரிமை சம்பந்தப்பட்ட விவகாரம். ஆகவே இரு அமைப்பினரையும் பிரதிவாதிகளாக சேர்க்கக்கூடாது என்றும் கூறி உள்ளனர்.

அதேபோல், சட்டபை செயலாளர் பூபதி தரப்பிலும் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து முதலமைச்சர் அளித்த பதிலுக்கு விளக்கம் அளிக்க கால அவகாசம் தேவை என்று திமுக சார்பில் உடனடியாக மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை ஏற்ற நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் சுந்தர் கொண்ட அமர்வு விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளது.